அமெரிக்கா - ஈரான் அமைதி ஒப்பந்தம் கையெழுத்து: முழுமையான போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானதைத் தொடர்ந்து முழுமையான போர் நிறுத்தம் அமலுக்கு வந்துள்ளது. 14 முக்கிய அம்சங்களை உள்ளடக்கிய இந்த ஒப்பந்தம் உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.
உலக நாடுகள் நீண்டகாலமாக எதிர்பார்த்திருந்த அமெரிக்கா - ஈரான் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானதைத் தொடர்ந்து, இரு நாடுகளுக்கும் இடையேயான முழுமையான போர் நிறுத்தம் அதிகாரப்பூர்வமாக அமலுக்கு வந்துள்ளது.
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே நீண்டகாலமாக நீடித்து வந்த பதற்றத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான பேச்சுவார்த்தைகள் கடந்த சில வாரங்களாக தீவிரமாக நடைபெற்றன. இதன் தொடர்ச்சியாக, போர் நிறுத்தத்திற்கான வரைவு ஒப்பந்தம் கடந்த வாரம் இறுதி செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியானது.
இந்த ஒப்பந்தத்தில் இரு நாடுகளும் ஸ்விட்சர்லாந்தில் வெள்ளிக்கிழமை முறைப்படி கையெழுத்திட உள்ளதாக முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது. பாகிஸ்தான் இந்த பேச்சுவார்த்தையில் மத்தியஸ்தராக செயல்பட்டதாகவும் கூறப்பட்டது.
இந்நிலையில், ஜி7 மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரான்ஸ் சென்றுள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் ஏற்பாடு செய்திருந்த இரவு விருந்தின்போது ஒரு நாள் முன்னதாகவே அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதேபோல், ஈரான் அதிபர் மசூத் பெசஸ்கியானும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதாக ஈரான் அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதன் மூலம் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே முழுமையான போர் நிறுத்தம் நடைமுறைக்கு வந்துள்ளது.
இந்த அமைதி ஒப்பந்தத்தில் மொத்தம் 14 முக்கிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. அவற்றில், ஈரான் துறைமுகங்களுக்கு எதிராக அமெரிக்கா விதித்திருந்த கடல்வழி முற்றுகையை வாபஸ் பெறுவது, ஹோர்முஸ் நீரிணையை நிபந்தனையின்றி திறப்பது, லெபனானுக்கு எதிரான ராணுவ நடவடிக்கைகளை நிறுத்துவது மற்றும் ஈரானின் மறுகட்டமைப்புக்காக அமெரிக்கா நிதி உதவி வழங்குவது உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.
சர்வதேச அரசியல் அரங்கில் முக்கிய திருப்புமுனையாக பார்க்கப்படும் இந்த ஒப்பந்தம், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் பதற்றத்தை குறைக்கும் நடவடிக்கையாக கருதப்படுகிறது. மேலும், உலக பொருளாதாரம் மற்றும் எரிசக்தி சந்தைகளிலும் இதன் தாக்கம் எதிரொலிக்கும் என அரசியல் ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
Prasanth Subramani