எவரெஸ்டில் சோகம்.. சிகரத்திலிருந்து இறங்கியபோது 2 இந்தியர்கள் உயிரிழப்பு!

எவரெஸ்ட் சிகரத்திலிருந்து கீழிறங்கும் போது கடும் சோர்வு காரணமாக இரண்டு இந்திய மலையேறுபவர்கள் உயிரிழந்துள்ளனர். இந்த பருவத்தில் எவரெஸ்டில் பலியானோர் எண்ணிக்கை 5ஆக உயர்ந்துள்ளது.

எவரெஸ்டில் சோகம்.. சிகரத்திலிருந்து இறங்கியபோது 2 இந்தியர்கள் உயிரிழப்பு!

எவரெஸ்ட் சிகரத்திலிருந்து கீழிறங்கியபோது இரண்டு இந்திய மலையேறுபவர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உயிரிழந்தவர்கள் அருண் குமார் திவாரி மற்றும் சந்தீப் அரே என அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்கள் சிகரத்திலிருந்து கீழிறங்கும்போது கடுமையான சோர்வால் பாதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து நேபாளத்தின் பயண ஏற்பாட்டாளர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் ரிஷி பண்டாரி கூறுகையில், “மலையேறுபவர்கள் மிகவும் சோர்வடைந்திருந்தனர். அவர்களை காப்பாற்ற வழிகாட்டிகள் கடுமையாக முயற்சி செய்தும் முடியவில்லை” என்று தெரிவித்தார்.

மேலும், சந்தீப் அரே புதன்கிழமையும், அருண் குமார் திவாரி வியாழக்கிழமையும் மாலை 5.30 மணியளவில் எவரெஸ்ட் சிகரத்தை அடைந்ததாக கூறப்படுகிறது.

உயிரிழந்த இருவரின் உடல்களையும் காத்மாண்டுவுக்கு கொண்டு வர முயற்சிகள் நடைபெற்று வருவதாக பயணத்தை ஏற்பாடு செய்த Pioneer Adventures நிறுவனத்தின் இயக்குநர் நிவேஷ் கர்கி தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவத்துடன், இந்த பருவத்தில் எவரெஸ்ட் மலையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5ஆக உயர்ந்துள்ளது.

அண்மையில் எவரெஸ்ட் மலையேற்றத்தின் போது மூன்று நேபாள மலையேறுபவர்களும் உயிரிழந்திருந்தனர்.

மேலும், கடந்த புதன்கிழமை 8,848.86 மீட்டர் உயரமுள்ள எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த 274 மலையேறுபவர்களில் சந்தீப் அரே உட்பட மூன்று இந்தியர்களும் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.