RCB vs GT குவாலிஃபயர் 1 இன்று.. நேரடி ஃபைனலுக்கு யார் செல்லப் போகிறார்கள்?
IPL 2026 குவாலிஃபயர் 1 போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன. வெல்லும் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும்.
IPL 2026 தொடரின் மிக முக்கியமான ‘குவாலிஃபயர் 1’ போட்டியில் நடப்பு சாம்பியன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் இன்று (மே 26) மோதுகின்றன.
இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறும். தோல்வியடையும் அணி, ‘குவாலிஃபயர் 2’ போட்டியில் மீண்டும் ஒரு வாய்ப்பைப் பெறும்.
லீக் சுற்று முடிவில் இரு அணிகளும் தலா 18 புள்ளிகள் பெற்று புள்ளிப்பட்டியலில் முதல் இரண்டு இடங்களை பிடித்துள்ளன. நெட் ரன் ரேட் அடிப்படையில் பெங்களூரு அணி முதலிடத்தை பிடித்தது.
ரஜத் பட்டிதார் தலைமையிலான பெங்களூரு அணி இந்த சீசனில் அதிரடியான பேட்டிங் மற்றும் கட்டுக்கோப்பான பந்துவீச்சால் மிகப்பெரிய பலமாக திகழ்கிறது. பல போட்டிகளில் 200+ ஸ்கோர்களை கடந்துள்ள RCB அணியில் விராட் கோலி, தேவ்தத் படிக்கல் மற்றும் கேப்டன் ரஜத் பட்டிதார் தொடர்ந்து சிறப்பாக விளையாடி வருகின்றனர்.
பந்துவீச்சில் ஜாஷ் ஹேஸில்வுட், புவனேஷ்வர் குமார் மற்றும் ராசிக் சலாம் ஆகியோர் எதிரணிக்கு கடும் சவாலாக உள்ளனர். குறிப்பாக நெருக்கடியான போட்டிகளில் மீண்டு வந்து வெற்றி பெறும் திறன் RCB அணியின் முக்கிய பலமாக பார்க்கப்படுகிறது.
மறுபுறம், ஷுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும் இந்த சீசனில் மிகச் சிறந்த அணிகளில் ஒன்றாக திகழ்கிறது. கேப்டன் கில், சாய் சுதர்சன் மற்றும் ஜாஸ் பட்லர் ஆகியோரின் அதிரடி பேட்டிங் அணிக்கு வலுவான தொடக்கத்தை தொடர்ந்து வழங்கி வருகிறது.
சீசனின் முதல் பாதியில் சற்றே தடுமாறிய குஜராத் பந்துவீச்சு அணி, பின்னர் அபாரமாக மீண்டது. முகமது சிராஜ், ககிசோ ரபாடா மற்றும் பிரசித் கிருஷ்ணா ஆகியோரின் வேகப்பந்தும், ரஷீத் கான் மற்றும் சாய் கிஷோரின் சுழற்பந்தும் எதிரணிக்கு பெரிய சவாலாக இருக்கிறது.
இரு அணிகளும் சமபலத்தில் இருப்பதால் இந்த போட்டி ரசிகர்களுக்கு விறுவிறுப்பான மோதலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நேருக்கு நேர்
IPL வரலாற்றில் RCB மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் இதுவரை 8 முறை மோதியுள்ளன. இதில் இரு அணிகளும் தலா 4 வெற்றிகள் பெற்று சமநிலையில் உள்ளன.
இந்த சீசனிலும் இரு அணிகள் இரண்டு முறை மோதியுள்ள நிலையில், தலா ஒரு வெற்றியை பெற்றுள்ளன. பிளேஆஃப் சுற்றில் இந்த அணிகள் சந்திப்பது இதுவே முதல்முறையாகும்.
ஆடுகளம் எப்படி?
தர்மசாலா மைதானம் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு இரண்டிற்கும் சம வாய்ப்பு வழங்கும் மைதானமாக கருதப்படுகிறது. இங்கு நடைபெற்ற சமீபத்திய இரவு போட்டிகளில் chasing செய்த அணிகளே வெற்றி பெற்றுள்ளன.
மேலும், இந்த மைதானத்தில் ஸ்கோரை பாதுகாப்பது சற்று கடினம் என கூறப்படுகிறது. வானிலை அறிக்கையின்படி, போட்டிக்கு மழை தடங்கல் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.
கடைசியாக பஞ்சாப் அணிக்கு எதிராக இங்கு விளையாடி வெற்றி பெற்ற அனுபவம் RCB அணிக்கு கூடுதல் நம்பிக்கையை வழங்குகிறது. அதேசமயம், குஜராத் டைட்டன்ஸ் அணி தனது IPL வரலாற்றில் முதல்முறையாக தர்மசாலாவில் விளையாடுவது சவாலாக அமையக்கூடும்.
Prasanth Subramani