ஜேமி ஓவர்டனுக்கு மாற்றாக தென்னாப்பிரிக்க ஆல்ரவுண்டரை சேர்த்த சிஎஸ்கே!

காயம் காரணமாக ஐபிஎல் 2026 தொடரிலிருந்து விலகிய ஜேமி ஓவர்டனுக்குப் பதிலாக தென்னாப்பிரிக்க ஆல்ரவுண்டர் டியான் ஃபாரஸ்டரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரூ.75 லட்சத்திற்கு ஒப்பந்தம் செய்துள்ளது.

ஜேமி ஓவர்டனுக்கு மாற்றாக தென்னாப்பிரிக்க ஆல்ரவுண்டரை சேர்த்த சிஎஸ்கே!

காயம் காரணமாக ஐபிஎல் தொடரிலிருந்து விலகியுள்ள ஜேமி ஓவர்டனுக்குப் பதிலாக தென்னாப்பிரிக்க ஆல்ரவுண்டரான டியான் ஃபாரஸ்டரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மாற்று வீரராக அறிவித்துள்ளது.

ஐபிஎல் தொடரின் 19-வது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மும்பை மற்றும் லக்னௌ அணிகள் பிளே ஆஃப் வாய்ப்பை இழந்த நிலையில், மற்ற அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேற கடும் போட்டியில் ஈடுபட்டுள்ளன.

தொடக்கத்தில் தடுமாறிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தற்போது மீண்டும் வெற்றிப்பாதைக்கு திரும்பியுள்ள நிலையில், அணியின் முக்கிய வீரர்கள் காயம் காரணமாக விலகுவது சவாலாக மாறியுள்ளது. ஏற்கனவே கலீல் அகமது, ஆயுஷ் மாத்ரே, நாதன் எல்லிஸ், ராமகிருஷ்ண கோஷ் மற்றும் எம்.எஸ். தோனி ஆகியோர் காயம் காரணமாக விளையாடாத நிலையில், தற்போது ஜேமி ஓவர்டனும் அணியில் இருந்து விலகியுள்ளார்.

நடப்பு ஐபிஎல் தொடரில் 10 போட்டிகளில் விளையாடிய ஜேமி ஓவர்டன், 14 விக்கெட்டுகள் கைப்பற்றி 136 ரன்கள் எடுத்திருந்தார். பேட்டிங்கிலும் பந்துவீச்சிலும் முக்கிய பங்களிப்பு வழங்கிய அவர், காயம் காரணமாக தொடரின் மீதமுள்ள போட்டிகளில் இருந்து விலகியுள்ளார்.

இந்த நிலையில், அவருக்குப் பதிலாக தென்னாப்பிரிக்க அணியின் ஆல்ரவுண்டரான டியான் ஃபாரஸ்டரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரூ.75 லட்சத்திற்கு ஒப்பந்தம் செய்துள்ளது.

டியான் ஃபாரஸ்டர் கடந்த மார்ச் மாதம் நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் தென்னாப்பிரிக்க அணிக்காக அறிமுகமானார். இதுவரை 5 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 83 ரன்கள் எடுத்துள்ளார்.

பிளே ஆஃப் சுற்றை நோக்கி நகரும் முக்கிய கட்டத்தில் டியான் ஃபாரஸ்டர் அணியில் இணைந்திருப்பது சென்னை அணிக்கு கூடுதல் பலமாக பார்க்கப்படுகிறது.