வாட்ஸ்அப் பயனர்களுக்கு CERT-In சைபர் எச்சரிக்கை... .vbs கோப்புகளை திறக்க வேண்டாம்!
வாட்ஸ்அப் வெப் மற்றும் டெஸ்க்டாப் பயனர்களை குறிவைத்து மால்வேர் தாக்குதல் நடைபெறுவதாக CERT-In எச்சரித்துள்ளது. .vbs கோப்புகளை திறக்க வேண்டாம் என்றும் பயனர்கள் விழிப்புடன் இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வாட்ஸ்அப் வெப் மற்றும் டெஸ்க்டாப் பயன்பாட்டைப் பயன்படுத்தும் பயனர்களுக்கு மத்திய அரசின் இந்திய கணினி அவசர நடவடிக்கை குழு (CERT-In) முக்கியமான சைபர் பாதுகாப்பு எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. சமீப காலமாக வாட்ஸ்அப் கணக்குகளை குறிவைத்து மால்வேர் தாக்குதல்கள் அதிகரித்து வருவதாகவும், குறிப்பாக ஹேக் செய்யப்பட்ட வாட்ஸ்அப் கணக்குகள் மூலம் தீங்கிழைக்கும் VBScript (.vbs) கோப்புகள் அனுப்பப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த .vbs வகை கோப்புகள் நம்பகமான நண்பர்கள், உறவினர்கள் அல்லது அலுவலக சக ஊழியர்களின் கணக்குகளிலிருந்தே வந்தாலும் அவற்றை உடனடியாக திறக்கக் கூடாது என்று CERT-In வலியுறுத்தியுள்ளது. எதிர்பாராத வகையில் இதுபோன்ற கோப்புகள் வந்தால், அவற்றை அனுப்பிய நபரிடம் தொலைபேசி அழைப்பு அல்லது வேறு செய்தி மூலம் உறுதிப்படுத்திய பிறகே நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பயனர்கள் கவனக்குறைவாக .vbs கோப்புகளை திறந்தால், மால்வேர் சாதனத்தில் நிறுவப்பட்டு கணினியின் கட்டுப்பாட்டை ஹேக்கர்கள் கைப்பற்றும் அபாயம் உள்ளது. இதன் மூலம் கடவுச்சொற்கள், வங்கி விவரங்கள், தனிப்பட்ட ஆவணங்கள் உள்ளிட்ட முக்கியமான தகவல்கள் திருடப்பட வாய்ப்புள்ளது. மேலும், பாதிக்கப்பட்ட கணக்கின் மூலம் மற்ற தொடர்புகளுக்கும் இதேபோன்ற தீங்கிழைக்கும் கோப்புகள் தானாக அனுப்பப்படும் அபாயமும் உள்ளது.
எனவே வாட்ஸ்அப் வெப் மற்றும் டெஸ்க்டாப் பயனர்கள் அறியாத அல்லது எதிர்பாராத .vbs கோப்புகளை திறக்காமல் இருக்க வேண்டும். சந்தேகத்திற்கிடமான கோப்புகளை உடனடியாக நீக்குவதுடன், கணினியில் புதுப்பிக்கப்பட்ட வைரஸ் தடுப்பு மென்பொருளைப் பயன்படுத்தி, இயக்குதளம் மற்றும் வாட்ஸ்அப் செயலியை எப்போதும் சமீபத்திய பதிப்பில் வைத்திருக்கவும் CERT-In அறிவுறுத்தியுள்ளது.
Prasanth Subramani