வாட்ஸ்-அப் மூலம் கேரளா லாட்டரி சூதாட்டம்: உக்கடத்தில் வாலிபர் கைது; 2 ஸ்மார்ட்போன்கள் பறிமுதல்

கோவை உக்கடத்தில் வாட்ஸ்-அப் குழுக்கள் மூலம் கேரளா லாட்டரி முடிவுகளை அடிப்படையாகக் கொண்டு சட்டவிரோத லாட்டரி சூதாட்டம் நடத்தியதாக 33 வயது வாலிபர் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து 2 ஸ்மார்ட்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

வாட்ஸ்-அப் மூலம் கேரளா லாட்டரி சூதாட்டம்: உக்கடத்தில் வாலிபர் கைது; 2 ஸ்மார்ட்போன்கள் பறிமுதல்

கோவை உக்கடம் புதிய பேருந்து நிலைய கழிப்பறை அருகே, வாட்ஸ்-அப் குழுக்கள் மூலம் கேரளா லாட்டரி முடிவுகளை அடிப்படையாகக் கொண்டு சட்டவிரோதமாக லாட்டரி சூதாட்டம் நடத்தி பணம் வசூலித்ததாக இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

உக்கடம் போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் தலைமையிலான போலீசார் அப்பகுதியில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது செல்போன் மூலம் லாட்டரி எண்களை பதிவு செய்து, வாடிக்கையாளர்களிடம் இருந்து பணம் வசூலித்துக் கொண்டிருந்த நபரை போலீசார் பிடித்தனர்.

விசாரணையில், அவர் கரும்புக்கடை ஆசாத் நகரைச் சேர்ந்த பயாஸ்தீன் (33) என்பதும், தற்போது உக்கடம் கே.ஜி. லே-அவுட் பகுதியில் தங்கி இருப்பதும் தெரியவந்தது.

அவரிடமிருந்து லாட்டரி எண்கள் மற்றும் பணப் பரிவர்த்தனைகளுக்குப் பயன்படுத்தப்பட்ட 2 ஸ்மார்ட்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இந்த சம்பவம் தொடர்பாக இன்ஸ்பெக்டர் கோமதி வழக்குப்பதிவு செய்து, வாட்ஸ்-அப் மூலம் நடைபெற்றதாகக் கூறப்படும் சட்டவிரோத லாட்டரி சூதாட்டம் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்.