காவலர் தினம்: கோவை காவல்துறை அருங்காட்சியகத்தில் செப்டம்பர் 6-ல் இலவச அனுமதி

காவலர் தினத்தையொட்டி செப்டம்பர் 6-ம் தேதி கோவை தமிழ்நாடு காவல்துறை அருங்காட்சியகத்தை பொதுமக்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் இலவசமாக பார்வையிட சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

காவலர் தினம்: கோவை காவல்துறை அருங்காட்சியகத்தில் செப்டம்பர் 6-ல் இலவச அனுமதி

காவலர் தினத்தையொட்டி, கோவையில் உள்ள தமிழ்நாடு காவல்துறை அருங்காட்சியகத்தில் வரும் செப்டம்பர் 6-ம் தேதி பொதுமக்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் இலவசமாக பார்வையிட சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கோவை மாநகர காவல் ஆணையர் டாக்டர் என். கண்ணன், ஐபிஎஸ் அவர்களின் அறிவுறுத்தலின்படி இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காவல்துறைக்கும் பொதுமக்களுக்கும் இடையிலான நல்லுறவை வலுப்படுத்தும் நோக்கிலும் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

காவல்துறை அருங்காட்சியகத்தில் பழமையான ஆயுதங்கள், காவல்துறை சீருடைகள், தர அடையாளங்கள், பதக்கங்கள், காவல் உபகரணங்கள், புலனாய்வு சாதனங்கள் மற்றும் புகைப்பட, ஒலி-ஒளி உபகரணங்கள் உள்ளிட்ட பல்வேறு வரலாற்றுச் சிறப்புமிக்க பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

மேலும், வீரப்பன் மற்றும் மலையூர் மம்பட்டியான் உள்ளிட்ட குற்றக் குழுக்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட ஆயுதங்களும், இந்திய ராணுவம் மற்றும் கடற்படையில் பயன்படுத்தப்பட்ட T-55 டேங்க், ரிகாய்லெஸ் துப்பாக்கி, டார்பிடோ மற்றும் தரையிலிருந்து வானில் உள்ள இலக்கைத் தாக்கும் ஏவுகணை உள்ளிட்ட உபகரணங்களும் அருங்காட்சியகத்தில் இடம்பெற்றுள்ளன.

செப்டம்பர் 6-ம் தேதி இந்த இலவச வாய்ப்பைப் பயன்படுத்தி அருங்காட்சியகத்தைப் பார்வையிட்டு, தமிழ்நாடு காவல்துறையின் வரலாறு மற்றும் பணிகளை அறிந்துகொள்ளுமாறு கோவை மாநகர காவல்துறை பொதுமக்கள் மற்றும் மாணவர்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.