“என் அப்பா கொடுத்த மிகப்பெரிய பரிசு இவர்கள்தான்!” – ஜேசன் சஞ்சய்
ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகும் சிக்மா திரைப்படம் அக்டோபர் 2, 2026 அன்று வெளியாகிறது. தனது முதல் படத்திற்காக தந்தை விஜய் கொடுத்த பரிசு குறித்து ரசிகர்களை சுட்டிக்காட்டி ஜேசன் சஞ்சய் அளித்த சுவாரஸ்யமான பதில் கவனம் பெற்றுள்ளது.
விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகும் ‘சிக்மா’ திரைப்படம் அக்டோபர் 2, 2026 அன்று வெளியாக உள்ளது. சுந்தீப் கிஷன் நடிக்கும் இப்படம் ஆக்ஷன், அட்வென்ச்சர் மற்றும் ஹெய்ஸ்ட் காமெடி கலந்த கதைக்களத்தில் உருவாகியுள்ளது.
படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில், தனது முதல் படத்திற்காக தந்தை விஜய் என்ன பரிசு கொடுத்தார் என்று ஜேசனிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
அப்போது ரசிகர்கள் ஆரவாரம் செய்த நிலையில், அவர்களை சுட்டிக்காட்டிய ஜேசன் சஞ்சய், “இவர்கள் அனைவரும்தான்” என்று சிரித்தபடி பதிலளித்தார். அவரது இந்த பதில் நிகழ்ச்சியில் கவனம் பெற்றது.
மேலும், விஜய் ‘சிக்மா’ படத்தை புரமோட் செய்ய மாட்டார் என்றும் ஜேசன் தெரிவித்துள்ளார். படத்தின் புரமோஷன் திரைப்படத்தை மையமாகக் கொண்டதாக இருக்க வேண்டும் என்பதே தனது விருப்பம் என்றும் அவர் கூறினார்.
விஜய் தற்போது முதலமைச்சராக இருப்பதால் அவருக்கு பல்வேறு பொறுப்புகள் இருப்பதாகவும் ஜேசன் தெரிவித்துள்ளார். அதே நேரத்தில், விஜய் படத்தின் வெளியீட்டுக்காக காத்திருப்பதாகவும், படத்தைப் பார்க்க மிகவும் ஆர்வமாக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
‘சிக்மா’ படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ளது. தமன் இசையமைத்துள்ள இப்படத்தில் சுந்தீப் கிஷன், ஃபரியா அப்துல்லா, ராகு சுந்தரம், அன்புத் தாசன், யோக் ஜேப்பி, சம்பத் ராஜ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
முதலில் ஜூலை 31, 2026 அன்று வெளியாக இருந்த ‘சிக்மா’ திரைப்படம் தற்போது அக்டோபர் 2, 2026 அன்று வெளியாக உள்ளது. படத்தின் டிரெய்லர் மற்றும் இசை செப்டம்பர் 18, 2026 அன்று வெளியாக உள்ளது.
Dharshini