ஐபிஎல் குவாலிஃபயர் 2 இன்று.. ஃபைனல் கனவை நனவாக்கப் போவது ராஜஸ்தானா? குஜராத்தா?
IPL 2026 குவாலிஃபயர் 2 போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன. வெற்றி பெறும் அணி இறுதிப்போட்டியில் RCB-யை எதிர்கொள்ளும்.
IPL 2026 தொடரின் மிக முக்கியமான ‘குவாலிஃபயர் 2’ போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் இன்று மோதுகின்றன. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி, இறுதிப்போட்டியில் நடப்பு சாம்பியனான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்கொள்ளும்.
இந்த பரபரப்பான மோதல் நியூ சண்டீகரில் உள்ள மகாராஜா யாதவீந்திர சிங் பிசிஏ மைதானத்தில் நடைபெறுகிறது.
வெற்றியின் வேகத்தில் ராஜஸ்தான்
எலிமினேட்டர் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 47 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மிகுந்த நம்பிக்கையுடன் இந்த போட்டியை எதிர்கொள்கிறது.
அந்த போட்டியில் இளம் அதிரடி வீரர் வைபவ் சூர்யவன்ஷி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். வெறும் 29 பந்துகளில் 97 ரன்கள் குவித்த அவர், 12 சிக்ஸர்கள் மற்றும் 5 பவுண்டரிகள் விளாசி ஹைதராபாத் பந்துவீச்சை சிதறடித்தார்.
பேட்டிங்கில் மட்டுமல்லாமல், பந்துவீச்சிலும் ராஜஸ்தான் அணி சிறப்பாக செயல்பட்டது. ஜோஃப்ரா ஆர்ச்சர் மற்றும் நாண்ட்ரே பர்கர் ஆகியோர் முக்கிய நேரங்களில் விக்கெட்டுகளை வீழ்த்தி அணியின் வெற்றிக்கு வழிவகுத்தனர்.
மீண்டு வர குஜராத் முயற்சி
மறுபுறம், குவாலிஃபயர் 1 போட்டியில் RCB அணியிடம் பெரிய தோல்வியை சந்தித்த குஜராத் டைட்டன்ஸ் அணி மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்ப முயற்சிக்கிறது.
255 ரன்கள் என்ற கடின இலக்கை துரத்திய குஜராத், 162 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அணியின் மற்ற வீரர்கள் சொதப்பிய நிலையில், ராகுல் தெவாதியா மட்டும் போராடி 68 ரன்கள் குவித்து அணியின் தோல்வி வித்தியாசத்தை குறைத்தார்.
கேப்டன் ஷுப்மன் கில், சாய் சுதர்சன், ஜாஸ் பட்லர் உள்ளிட்ட முக்கிய வீரர்கள் இந்த போட்டியில் சிறப்பாக செயல்பட வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.
இறுதிப்போட்டி டிக்கெட்டுக்கான மோதல்
இரு அணிகளும் வெற்றிக்காக முழு பலத்துடன் களமிறங்க உள்ளதால், ரசிகர்களுக்கு விறுவிறுப்பான போட்டி காத்திருக்கிறது.
ஒருபுறம் வெற்றியின் உத்வேகத்துடன் ராஜஸ்தான் ராயல்ஸ் களமிறங்க, மறுபுறம் தோல்வியில் இருந்து மீண்டு ஃபைனல் வாய்ப்பை கைப்பற்ற குஜராத் டைட்டன்ஸ் போராடவுள்ளது.
இந்த ‘செய் அல்லது செத்து மடி’ போட்டியில் வெற்றி பெறும் அணி, IPL 2026 இறுதிப்போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவை எதிர்கொள்ளும்.
Prasanth Subramani