குஜராத்தை 92 ரன்களில் நசுக்கிய RCB.. தொடர்ச்சியாக 2வது முறையாக IPL ஃபைனலுக்கு முன்னேற்றம்!
IPL 2026 குவாலிஃபயர் 1 போட்டியில் குஜராத் டைட்டன்ஸை 92 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.
IPL 2026 தொடரின் ‘குவாலிஃபயர் 1’ போட்டியில் நடப்பு சாம்பியனான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, குஜராத் டைட்டன்ஸை 92 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் RCB அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.
மறுபுறம், குஜராத் டைட்டன்ஸ் அணி தற்போது ‘குவாலிஃபயர் 2’ போட்டியில் விளையாட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
பட்டிதார் புயல்
டாஸ் வென்ற குஜராத் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி பேட்டிங் செய்த பெங்களூரு அணிக்கு ஆரம்பத்தில் வெங்கடேஷ் ஐயர் 19 ரன்களில் ஆட்டமிழந்தார்.
அதன்பின் விராட் கோலி மற்றும் தேவ்தத் படிக்கல் இணைந்து அணியை சரிவிலிருந்து மீட்டனர். இருவரும் இணைந்து 72 ரன்கள் கூட்டணி அமைத்தனர். விராட் கோலி 43 ரன்களில் வெளியேறினார்.
பின்னர் கேப்டன் ரஜத் பட்டிதார் அதிரடியாக களமிறங்கி குஜராத் பந்துவீச்சை சிதறடித்தார். மறுமுனையில் கிருணால் பாண்டியாவும் அதிரடியாக விளையாடினார்.
இருவரும் சேர்ந்து 4வது விக்கெட்டுக்கு 95 ரன்கள் சேர்த்து அணியை பெரிய ஸ்கோருக்கு கொண்டு சென்றனர். கிருணால் பாண்டியா 43 ரன்களில் ஆட்டமிழந்தார்.
ஆனால், கேப்டன் பட்டிதார் இறுதி வரை குஜராத் பந்துவீச்சாளர்களை பவுண்டரி, சிக்ஸர்களால் மிரட்டினார். வெறும் 33 பந்துகளில் 5 பவுண்டரிகள் மற்றும் 9 சிக்ஸர்களுடன் 93 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இதன் மூலம் RCB அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 254 ரன்கள் என்ற மாபெரும் இலக்கை பதிவு செய்தது.
சரிந்த குஜராத்
255 ரன்கள் என்ற கடின இலக்கை துரத்திய குஜராத் டைட்டன்ஸ் அணி ஆரம்பம் முதலே தடுமாறியது.
ஷுப்மன் கில் 2 ரன்களிலும், சாய் சுதர்சன் 14 ரன்களிலும் வெளியேறினர். ஜாஸ் பட்லர் மட்டும் 29 ரன்கள் எடுத்தாலும் மற்ற வீரர்கள் நிலைத்து நிற்க முடியவில்லை.
88 ரன்களுக்கே 8 விக்கெட்டுகளை இழந்த குஜராத் அணி முற்றிலும் அழுத்தத்துக்குள் சிக்கியது.
ஒருபுறம் ராகுல் தெவாதியா மட்டும் போராடி 43 பந்துகளில் 68 ரன்கள் எடுத்தார். ஆனால் அவருக்கு மற்ற முனையில் ஆதரவு கிடைக்கவில்லை.
இறுதியில் குஜராத் அணி 19.3 ஓவர்களில் 162 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
பந்துவீச்சிலும் RCB அசத்தல்
பெங்களூரு அணியின் பந்துவீச்சாளர்களும் சிறப்பாக செயல்பட்டனர். ஜேக்கப் டஃபி 3 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.
புவனேஷ்வர் குமார், ராசிக் சலாம் மற்றும் கிருணால் பாண்டியா தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர். ஜாஷ் ஹேஸில்வுட் 1 விக்கெட் எடுத்தார்.
தொடர்ந்து 2வது ஃபைனல்
கடந்த சீசனிலும் ‘குவாலிஃபயர் 1’ போட்டியில் வென்று நேரடியாக இறுதிப்போட்டிக்கு சென்றிருந்த RCB, இந்த முறையும் அதே சாதனையை மீண்டும் நிகழ்த்தியுள்ளது.
Prasanth Subramani