தரம்சாலாவில் திலக் வர்மா ஷோ.. பஞ்சாப்பை சாய்த்த மும்பை!

ஐபிஎல் 2026 தொடரில் பஞ்சாப் கிங்ஸை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்திய மும்பை இண்டியன்ஸ் அணிக்கு திலக் வர்மாவின் அதிரடி 75 ரன்கள் வெற்றியை பெற்றுத்தந்தது.

தரம்சாலாவில் திலக் வர்மா ஷோ.. பஞ்சாப்பை சாய்த்த மும்பை!

ஐபிஎல் 2026 தொடரின் 58-ஆவது லீக் போட்டியில் மும்பை இண்டியன்ஸ் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸை வீழ்த்தி ஆறுதல் வெற்றி பெற்றது. தரம்சாலாவில் நடைபெற்ற இந்த விறுவிறுப்பான போட்டியில் திலக் வர்மாவின் அதிரடி இன்னிங்ஸ் மும்பை வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது.

முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 200 ரன்கள் எடுத்தது. தொடக்க வீரர் பிரப்சிம்ரன் சிங் 32 பந்துகளில் 57 ரன்கள் விளாசி அணிக்கு வலுவான தொடக்கத்தை கொடுத்தார். இறுதிக்கட்டத்தில் அஸ்மத்துல்லா ஓமர்சாய் 17 பந்துகளில் 38 ரன்கள் சேர்த்து ஸ்கோரை 200 ரன்களை கடந்தது.

மும்பை தரப்பில் ஷர்துல் தாக்கூர் சிறப்பாக பந்துவீசி 4 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.

பின்னர் 201 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை இண்டியன்ஸ் அணி, 19.5 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 205 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

தொடக்க வீரர் ரயன் ரிக்கெல்டன் 23 பந்துகளில் 48 ரன்கள் சேர்த்து வேகமான தொடக்கத்தை வழங்கினார். அதன் பின்னர் திலக் வர்மா அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி பஞ்சாப் பந்துவீச்சாளர்களை சிதறடித்தார். அவர் 33 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 75 ரன்கள் விளாசி மும்பையை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றார்.

இறுதிக்கட்டத்தில் வில் ஜாக்ஸ் அதிரடியாக விளையாடி வெற்றியை உறுதி செய்தார். கடைசி மூன்று ஓவர்களில் மும்பை பேட்ஸ்மேன்கள் வேகமாக ரன்கள் குவித்ததால் போட்டி முழுமையாக மும்பை பக்கம் திரும்பியது.

திலக் வர்மாவின் மிரட்டலான இன்னிங்ஸுக்காக அவருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.