கோவையில் மின்வெட்டால் 3 நாட்களில் ரூ.30 கோடி இழப்பு!
கோவையில் அறிவிக்கப்படாத மின்தடையால் சிறு மற்றும் குறு தொழில் நிறுவனங்களின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த 3 நாட்களில் உற்பத்தி இழப்பு உள்ளிட்ட காரணங்களால் சுமார் ரூ.30 கோடி இழப்பு ஏற்பட்டதாக தொழில் அமைப்புகள் தெரிவித்துள்ளன.
கோவையில் கடந்த சில நாட்களாக அறிவிக்கப்படாத மின்தடைகள் அதிகரித்துள்ளதால், சிறு மற்றும் குறு தொழில் நிறுவனங்களின் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தொழில் அமைப்புகள் தெரிவித்துள்ளன.
கடந்த மூன்று நாட்களில் ஏற்பட்ட உற்பத்தி இழப்பு, மூலப்பொருட்கள் வீணாகுதல், இயந்திரங்கள் மற்றும் உதிரிபாகங்கள் சேதமடைதல் உள்ளிட்ட காரணங்களால் சுமார் ரூ.30 கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாக தொழில் துறையினர் மதிப்பிட்டுள்ளனர்.
கோவையில் சுமார் 50,000 சிறு மற்றும் குறு தொழில் நிறுவனங்கள் வேலை ஆர்டர் அடிப்படையில் செயல்பட்டு வருவதாக தமிழ்நாடு கைத்தொழில் மற்றும் குறுந்தொழில் நிறுவனங்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
சில பகுதிகளில் ஒரு நாளைக்கு 7 முதல் 10 முறை வரை திடீர் மின்தடை ஏற்பட்டதாக தொழில் துறையினர் கூறுகின்றனர். இதனால் இயந்திரங்கள் திடீரென நிறுத்தப்படுவதுடன், உற்பத்தியில் பயன்படுத்தப்படும் மூலப்பொருட்களும் வீணாகி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு இயந்திரத்திற்கு நாளொன்றுக்கு குறைந்தபட்சம் ரூ.2,000 வரை இழப்பு ஏற்படுவதாகவும், கோவையின் குறு மற்றும் சிறு தொழில் நிறுவனங்களுக்கு ஒட்டுமொத்தமாக நாளொன்றுக்கு சுமார் ரூ.10 கோடி இழப்பு ஏற்படுவதாகவும் தொழில் அமைப்புகள் மதிப்பிட்டுள்ளன.
இதனிடையே, மின்பற்றாக்குறை இல்லை என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சில பகுதிகளில் உள்ளூர் மின்மாற்றிகளில் அதிக சுமை ஏற்படுவதால் மின்தடை மற்றும் மின்சார டிரிப்பிங் ஏற்படக்கூடும் என அவர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.
தொழிற்சாலைகளின் உற்பத்தி பாதிக்கப்படாத வகையில் மின்விநியோகத்தை சீராக வழங்க வேண்டும் என தொழில் அமைப்புகள் வலியுறுத்தியுள்ளன.
Dharshini