சைபர் பாதுகாப்பு சோதனையில் 3 நிறுவனங்களின் சிஸ்டங்களை அணுகிய Gemini AI!

கூகுளின் Gemini AI, மே 2026-ல் நடைபெற்ற சைபர் பாதுகாப்பு சோதனையின்போது 3 உண்மையான நிறுவனங்களின் அமைப்புகளை அணுகியதாக கூகுள் உறுதி செய்துள்ளது. சோதனைக்கான இணைய அணுகல் எதிர்பாராத வகையில் கிடைத்ததே இதற்கு காரணமாக இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சைபர் பாதுகாப்பு சோதனையில் 3 நிறுவனங்களின் சிஸ்டங்களை அணுகிய Gemini AI!

கூகுளின் Gemini AI, மே 2026-ல் நடைபெற்ற சைபர் பாதுகாப்பு சோதனையின்போது உண்மையான 3 நிறுவனங்களின் கணினி அமைப்புகளை அணுகியதாக கூகுள் உறுதி செய்துள்ளது. இந்தச் சம்பவங்கள் AI பாதுகாப்பு மதிப்பீட்டு நிறுவனமான Irregular நடத்திய சோதனைகளின்போது நடைபெற்றன. 

இந்தச் சோதனையில் Gemini, ஒரு கற்பனை நிறுவனத்தின் அமைப்பில் தகவல்களைத் தேடும் வகையில் செயல்படுத்தப்பட்டது. ஆனால் சோதனைச் சூழலில் எதிர்பாராத விதமாக இணைய அணுகல் கிடைத்ததால், உண்மையான நிறுவனங்களின் இணைய அமைப்புகளையும் அது அணுகியது.

ஒரு சம்பவத்தில், சோதனைக்காக உருவாக்கப்பட்ட நிறுவனத்தின் பெயரும் உண்மையான நிறுவனத்தின் பெயரும் ஒரே மாதிரியாக இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் Gemini உண்மையான நிறுவனத்தின் பாதுகாக்கப்பட்ட அமைப்புக்கான கடவுச்சொல்லை ஊகித்து அணுகலைப் பெற்றது. மற்ற இரண்டு சம்பவங்களில், இணையத்தில் பொதுவாகக் கிடைத்த களஞ்சியங்களில் இருந்த உள்நுழைவு விவரங்களை கண்டறிந்து, அவற்றைப் பயன்படுத்தி உண்மையான நிறுவனங்களின் அமைப்புகளை அணுகியது. 

மூன்று சம்பவங்களிலும் தான் அணுகியது உண்மையான நிறுவனங்களின் அமைப்புகள் என்பதை உணர்ந்தவுடன் Gemini தனது செயல்பாட்டை நிறுத்தியதாக கூகுள் தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்ட மூன்று நிறுவனங்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டதாகவும், சோதனை நடைமுறைகளில் தேவையான மாற்றங்கள் செய்யப்பட்டதாகவும் கூகுள் தெரிவித்துள்ளது. 

இந்தச் சம்பவங்களில் எந்தவித பாதிப்பும் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படவில்லை. மேலும், சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் பெயர்கள் மற்றும் அணுகப்பட்ட குறிப்பிட்ட அமைப்புகள் குறித்த முழுமையான விவரங்கள் பொதுவெளியில் வெளியிடப்படவில்லை.

AI அமைப்புகள் அதிக தன்னாட்சி திறன்களுடன் இணையம் மற்றும் கணினி அமைப்புகளை அணுகும் நிலையில், அவற்றுக்கான சோதனைச் சூழல்களை தனிமைப்படுத்துதல், இணைய அணுகலை கட்டுப்படுத்துதல் மற்றும் பாதுகாப்பு தடுப்புகளை வலுப்படுத்துதல் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை இந்தச் சம்பவம் மீண்டும் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளது.