எல்லிஸ் பெர்ரி - ஆஷ்லே கார்ட்னர் அதிரடி... இந்தியாவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய ஆஸ்திரேலியா!
ICC 10வது மகளிர் டி20 உலகக்கோப்பையின் 30வது லீக் போட்டியில் ஆஸ்திரேலியா, இந்தியாவை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது. எல்லிஸ் பெர்ரி ஆட்டநாயகி விருதை வென்றார்.
ICC 10வது மகளிர் டி20 உலகக்கோப்பையின் கடைசி லீக் போட்டியில் ஆஸ்திரேலியா 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது. லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இந்த முக்கியமான போட்டியில் எல்லிஸ் பெர்ரி அபார ஆல்-ரவுண்ட் ஆட்டத்தை வெளிப்படுத்தி ஆட்டநாயகி விருதை வென்றார். இந்த தோல்வியால் இந்தியாவின் அரையிறுதி கனவு முடிவுக்கு வந்தது.
டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்யத் தீர்மானித்தது. தொடக்க வீராங்கனைகளான ஸ்மிருதி மந்தனா மற்றும் ஷபாலி வர்மா எச்சரிக்கையுடன் இன்னிங்ஸை தொடங்கினர். பவர்பிளே முடிவில் இந்தியா விக்கெட் இழப்பின்றி 43 ரன்கள் எடுத்திருந்தாலும், எதிர்பார்த்த அதிரடி இல்லாமல் இருந்தது.
நடுப்பகுதியில் ஷபாலி வர்மா அதிரடியாக விளையாடி முக்கியமான பவுண்டரிகள் மற்றும் சிக்ஸர்களை விளாசினார். அவர் 50 ரன்களை எட்டிய பின்னர் சோபி மொலின்யூக்ஸின் சுழற்பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். பின்னர் ஜெமிமா ரோட்ரிக்ஸ் மற்றும் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் இணைந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
ஆஸ்திரேலியாவின் ஜார்ஜியா வேர்ஹாம், சோபி மொலின்யூக்ஸ், அன்னபெல் சதர்லாந்த் மற்றும் கிம் கார்த் ஆகியோர் கட்டுக்கோப்பாக பந்துவீசி இந்திய பேட்டர்களுக்கு அழுத்தம் கொடுத்தனர். இறுதி ஓவரில் ஹர்மன்ப்ரீத் கவுர் அபாரமான அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி தொடர்ந்து மூன்று சிக்ஸர்களை விளாசி அரைசதம் கடந்தார். அவரது அதிரடியால் இந்தியா 20 ஓவர்கள் முடிவில் 170/5 என்ற சவாலான இலக்கை நிர்ணயித்தது.
171 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலியாவுக்கு ரேணுகா சிங் முதல் ஓவரிலேயே ஜார்ஜியா வோல்லை வெளியேற்றி இந்தியாவுக்கு நம்பிக்கை அளித்தார். ஆனால் பீபி லிட்ச்ஃபீல்டும் பெத் மூனியும் இணைந்து அணியை மீட்டனர். பின்னர் ஸ்ரீசரணி மற்றும் தீப்தி சர்மா தலா ஒரு விக்கெட் கைப்பற்றி இந்தியாவை மீண்டும் போட்டிக்குள் கொண்டு வந்தனர்.
அதன்பின் எல்லிஸ் பெர்ரி மற்றும் ஆஷ்லே கார்ட்னர் இணைந்து ஆஸ்திரேலிய இன்னிங்ஸை முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். இருவரும் அமைதியாக ரன்களை சேர்த்ததுடன், தேவையான நேரங்களில் பவுண்டரிகளையும் சிக்ஸர்களையும் விளாசி இந்திய பந்துவீச்சாளர்களுக்கு எந்த வாய்ப்பும் அளிக்கவில்லை.
எல்லிஸ் பெர்ரி அரைசதம் கடந்ததுடன், ஆஷ்லே கார்ட்னரும் அதிரடி அரைசதம் பதிவு செய்தார். 100 ரன்களுக்கு மேல் கூட்டணி அமைத்த இந்த ஜோடி ஆட்டத்தை முழுமையாக ஆஸ்திரேலியாவின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. இறுதிக்கட்டத்தில் பெர்ரி ஆட்டமிழந்தாலும், ஜார்ஜியா வேர்ஹாம் வெற்றியை உறுதி செய்தார்.
19 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 171 ரன்கள் எடுத்த ஆஸ்திரேலியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று லீக் சுற்றை தோல்வியின்றி நிறைவு செய்தது. இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலியா அரையிறுதிக்கு முன்னேறியதுடன், தென்னாப்பிரிக்காவும் அரையிறுதி வாய்ப்பைப் பெற்றது. இந்தியா போராடிய போதிலும் முக்கியமான தருணங்களில் விக்கெட்டுகளை கைப்பற்றத் தவறியதால் தொடரிலிருந்து வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டது.
Prasanth Subramani