கோவையில் விரைவில் 'ஃபுட் ஸ்ட்ரீட்'... 4 இடங்கள் தேர்வு!
கோவை மாநகரில் சுகாதாரமான மற்றும் தரமான உணவுகளை வழங்கும் நோக்கில் 'ஃபுட் ஸ்ட்ரீட்' திட்டம் விரைவில் தொடங்கப்பட உள்ளது. காந்திபார்க், வ.உ.சி. மைதானம் உள்ளிட்ட 4 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
கோவை மாநகரில் சுகாதாரமான மற்றும் தரமான உணவுகளை பொதுமக்களுக்கு வழங்கும் நோக்கில், 'ஃபுட் ஸ்ட்ரீட்' (Food Street) திட்டம் விரைவில் செயல்படுத்தப்பட உள்ளது.
இந்த திட்டத்திற்காக கோவையம்புத்தூர் காவலர் குடியிருப்பு பகுதி, காந்திபார்க், வ.உ.சி. மைதானம் மற்றும் உக்கடம்–பெரியகுளம் ஆகிய நான்கு முக்கிய இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
திட்டத்தின் கீழ், தற்போது செயல்பட்டு வரும் தள்ளுவண்டி உணவுக் கடைகள் அனைத்தும் ஒரே இடத்தில் ஒழுங்குபடுத்தப்பட்டு, நவீன வசதிகளுடன் கூடிய விற்பனை மையங்களாக மாற்றப்படவுள்ளன.
மேலும், விற்பனையாளர்களுக்கு ஒரே மாதிரியான கடை அமைப்பு (Set-up), சுகாதாரமான சமையல் மற்றும் உணவு பரிமாறும் வசதிகள், கழிவுநீர் மற்றும் குப்பை மேலாண்மை, குடிநீர் வசதி, மின்விளக்குகள், அமர்விடங்கள் மற்றும் நவீன அழகமைப்புடன் கூடிய உள்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளன.
இந்த திட்டம் மூலம் தெருவோர உணவுக் கடைகளின் தரம் உயர்வதுடன், சுகாதாரமான உணவுகளை பொதுமக்கள் பாதுகாப்பாக சுவைக்க முடியும். மேலும், தள்ளுவண்டி வியாபாரிகளுக்கு நிரந்தரமான மற்றும் ஒழுங்குபடுத்தப்பட்ட வணிக சூழலும் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Prasanth Subramani