5 நாட்கள் எஸ்பிஐ சேவைகள் பாதிப்பு அபாயம்.. நாடு தழுவிய வேலைநிறுத்தம் அறிவிப்பு!
ஊழியர்கள் பற்றாக்குறை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி எஸ்பிஐ வங்கி ஊழியர்கள் மே 25 மற்றும் 26ஆம் தேதிகளில் நாடு தழுவிய வேலைநிறுத்தத்தை அறிவித்துள்ளனர்.
ஊழியர்கள் பற்றாக்குறை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பாரத ஸ்டேட் வங்கி (SBI) ஊழியர்கள் நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ளனர்.
அதன்படி, வரும் மே 25 மற்றும் 26ஆம் தேதிகளில் (திங்கள் மற்றும் செவ்வாய்) நாடு முழுவதும் உள்ள எஸ்பிஐ வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர்.
இதற்கு முன்பாக மே 23ஆம் தேதி நான்காவது சனிக்கிழமையும், மே 24ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமையும் வங்கி விடுமுறை நாள்களாகும். மேலும், மே 27ஆம் தேதி பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு பல மாநிலங்களில் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், எஸ்பிஐ வங்கி சேவைகள் தொடர்ந்து 5 நாட்கள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், அத்தியாவசிய வங்கி சேவைகளை தடையின்றி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அகில இந்திய பாரத ஸ்டேட் வங்கி ஊழியர் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
அதேநேரத்தில், வாடிக்கையாளர்கள் வேலைநிறுத்த நாள்களில் ஏடிஎம், யோனோ எஸ்பிஐ செயலி, யுபிஐ மற்றும் இணைய வங்கி சேவைகளை பயன்படுத்துமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வேலைநிறுத்தம் ஏன்?
தற்காலிக ஊழியர்களை நிரந்தர பணியாளர்களாக நியமிக்க வேண்டும், தேசிய ஓய்வூதிய திட்ட (NPS) பயனாளிகளுக்கான ஓய்வூதிய நிதி மேலாளர் தேர்வில் மாற்றம் செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வங்கி ஊழியர்கள் முன்வைத்துள்ளனர்.
மேலும், தற்காலிக ஊழியர்கள் மூலம் வங்கித் தரவுகள் கசிவு மற்றும் முறைகேடுகள் நடைபெற வாய்ப்பு இருப்பதாகவும் ஊழியர் சங்கங்கள் குற்றம்சாட்டியுள்ளன.
இந்த வேலைநிறுத்தம் காரணமாக வங்கி கிளை சேவைகள், பணப் பரிவர்த்தனைகள் மற்றும் வாடிக்கையாளர் சேவைகள் பாதிக்கப்படக்கூடும் என்பதால் பொதுமக்கள் முன்கூட்டியே தேவையான பணிகளை முடித்துக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
Prasanth Subramani