வணிக எரிவாயு சிலிண்டருக்கு இனி கட்டுப்பாடு இல்லை.. மத்திய அரசு முக்கிய அறிவிப்பு!

வணிக எரிவாயு சிலிண்டர்கள் விநியோகத்திற்கு விதிக்கப்பட்டிருந்த அனைத்து கட்டுப்பாடுகளையும் மத்திய அரசு நீக்கியுள்ளது. மேற்காசிய பதற்றம் தணிந்ததையடுத்து எரிவாயு விநியோகம் வழக்கம்போல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வணிக எரிவாயு சிலிண்டருக்கு இனி கட்டுப்பாடு இல்லை.. மத்திய அரசு முக்கிய அறிவிப்பு!

உணவகங்கள், ஹோட்டல்கள் மற்றும் தொழில் நிறுவனங்களுக்கு வழங்கப்படும் வணிக எரிவாயு (LPG) சிலிண்டர்கள் விநியோகத்தில் விதிக்கப்பட்டிருந்த அனைத்து கட்டுப்பாடுகளையும் மத்திய அரசு நீக்கியுள்ளது. மேற்காசிய பகுதியில் நிலவிய போர் பதற்றம் குறைந்து, எரிவாயு இறக்குமதி மீண்டும் சீரடைந்ததைத் தொடர்ந்து இந்த முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

கடந்த சில மாதங்களாக ஈரான், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இடையே நிலவிய மோதலால் ஹோர்முஸ் நீரிணை வழியாக எரிவாயு கப்பல்களின் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதன் விளைவாக இந்தியாவில் வணிக மற்றும் தொழில் நிறுவனங்களுக்கு வழங்கப்படும் எரிவாயு சிலிண்டர்களின் விநியோகத்தில் பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டிருந்தன.

தற்போது மேற்காசியாவில் நிலைமை சீரடைந்து, அமைதி ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளதால் ஹோர்முஸ் நீரிணை வழியாக எரிவாயு கப்பல்களின் போக்குவரத்து மீண்டும் தொடங்கியுள்ளது. மேலும், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட எரிவாயுவை ஏற்றிய கப்பல்கள் விரைவில் இந்தியா வந்தடைய உள்ளதாகவும், உள்நாட்டு எரிவாயு உற்பத்தியும் அதிகரித்துள்ளதாகவும் மத்திய பெட்ரோலிய அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, வணிக எரிவாயு சிலிண்டர்கள் விநியோகத்தின் மீது விதிக்கப்பட்டிருந்த அனைத்து கட்டுப்பாடுகளும் முழுமையாக நீக்கப்பட்டுள்ளன. இனி உணவகங்கள், தங்கும் விடுதிகள், தொழிற்சாலைகள் மற்றும் பிற வணிக நிறுவனங்களுக்கு தேவைக்கேற்ப முன்புபோல எரிவாயு சிலிண்டர்கள் விநியோகிக்கப்படும்.

மேலும், வணிக மற்றும் தொழில் நிறுவனங்களுக்கு மொத்தமாக எரிவாயு வழங்குவதற்கான தடையும் பகுதியளவில் தளர்த்தப்பட்டுள்ளது. எரிவாயு தட்டுப்பாடு ஏற்படுவதற்கு முன்பு வழங்கப்பட்ட அளவில் 50 சதவீதம் வரை மொத்த விநியோகம் மேற்கொள்ளப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இதன் மூலம் பல்வேறு தொழில் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு நிவாரணம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதே நேரத்தில், வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டர்கள் தடையின்றி கிடைப்பதற்கு மத்திய அரசு தொடர்ந்து முன்னுரிமை வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது. வணிக எரிவாயு விநியோகத்தை திட்டமிட்டு மேற்கொள்ள, வணிக மற்றும் தொழில் நிறுவனங்களின் நுகர்வோர் விவரங்களை தொடர்ந்து பராமரிக்க எண்ணெய் நிறுவனங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

குழாய் வழியாக எரிவாயு (PNG) வழங்கும் திட்டத்தையும் நாடு முழுவதும் மேலும் விரிவுபடுத்த மத்திய அரசு உறுதிபூண்டுள்ளது. ஏற்கனவே குழாய் வழி எரிவாயு வசதியை பயன்படுத்தும் வணிக நிறுவனங்கள் அதையே தொடர்ந்து பயன்படுத்துமாறும், வசதி உள்ள வீட்டு உபயோக எரிவாயு நுகர்வோரும் படிப்படியாக குழாய் வழி எரிவாயு பயன்பாட்டிற்கு மாறுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த புதிய உத்தரவுகளை உடனடியாக செயல்படுத்துவது தொடர்பாக அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமைச் செயலாளர்களுக்கும் மத்திய பெட்ரோலிய மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் அதிகாரப்பூர்வ கடிதம் அனுப்பியுள்ளது. இந்த அறிவிப்பால் வணிக நிறுவனங்கள் மற்றும் ஹோட்டல் துறையினர் பெரிதும் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.