வெனிசுவேலா நிலநடுக்கம்: இடிபாடுகளில் இருந்து குழந்தை, நாய்க்குட்டி உயிருடன் மீட்பு.. நம்பிக்கையை விதைத்த நெகிழ்ச்சி தருணங்கள்!
வெனிசுவேலாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்திற்குப் பிறகு இடிபாடுகளில் சிக்கியிருந்த குழந்தைகள் மற்றும் நாய்க்குட்டி உயிருடன் மீட்கப்பட்ட சம்பவம் மீட்புப் பணியாளர்களுக்கும் மக்களுக்கும் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
வெனிசுவேலாவில் அடுத்தடுத்து ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் நாட்டின் பல பகுதிகளில் கடும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளன. குறிப்பாக வடக்கு மாகாணமான லா குவாரியா உள்ளிட்ட பகுதிகளில் கட்டடங்கள் இடிந்து விழுந்த நிலையில், மீட்புப் படையினரும் அவசர உதவிப் பிரிவினரும் தீவிர மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை உயிருடன் மீட்கும் முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த ஒரு குழந்தை உயிருடன் மீட்கப்பட்ட சம்பவம் அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. குழந்தை பாதுகாப்பாக வெளியே கொண்டுவரப்பட்டதும், மீட்புப் பணியாளர்கள் உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர் விட்டு அழுத காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. குழந்தைக்கு பெரிய அளவில் காயங்கள் ஏதும் ஏற்படாதது அனைவருக்கும் நிம்மதியை அளித்துள்ளது.
இந்த மீட்பு சம்பவம், இடிபாடுகளுக்குள் இன்னும் பலர் உயிருடன் இருக்கக்கூடும் என்ற நம்பிக்கையை மீட்புப் பணியாளர்களுக்கும் பொதுமக்களுக்கும் ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள் மேலும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இதனிடையே, பொலிவரியன் பகுதியில் மற்றொரு குழந்தையும், வேறொரு இடத்தில் 12 வயது சிறுவனும் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், மற்றொரு பகுதியில் இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த பெண் ஒருவரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளார்.
மீட்புப் பணியின் போது இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த நாய்க்குட்டி ஒன்றையும் மீட்புப் படையினர் கண்டுபிடித்தனர். முதலில் அதற்கு தண்ணீர் வழங்கி ஆசுவாசப்படுத்திய அவர்கள், பின்னர் இடிபாடுகளை அகற்றி பாதுகாப்பாக வெளியே கொண்டு வந்தனர். இந்த காட்சிகளும் சமூக ஊடகங்களில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.
மேலும் வெளியான மற்றொரு வீடியோவில், நிலநடுக்கத்தில் சிக்கி மருத்துவமனை நோக்கி சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்த ஒரு பெண், மீட்புப் படையினர் உயிருடன் காப்பாற்றி அழைத்து வந்த தனது மகனை பார்த்ததும் கண்ணீர் மல்க அணைத்துக் கொண்ட நெகிழ்ச்சியான தருணமும் பதிவாகியுள்ளது.
நிலநடுக்கத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் தொடர்ந்து தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும் பலரை உயிருடன் மீட்கும் நம்பிக்கையுடன் மீட்புப் படையினர் இரவு பகலாக பணியாற்றி வருகின்றனர்.
Prasanth Subramani