போதைப்பொருளுக்கு எதிராக ஓடிய முதல்வர் ஜோசப் விஜய்.. இளைஞர்களுக்கு முக்கிய அறிவுரை!
சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு நாளையொட்டி நடைபெற்ற விழிப்புணர்வு மாரத்தானில் முதல்வர் ஜோசப் விஜய் பங்கேற்று, போதைப்பொருள் இல்லாத தமிழ்நாட்டை உருவாக்க அனைவரும் உறுதியேற்க வேண்டும் என வலியுறுத்தினார்.
சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு நாளையொட்டி நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில் தமிழ்நாடு முதல்வர் ஜோசப் விஜய் பங்கேற்று, போதைப்பொருள் இல்லாத தமிழ்நாட்டை உருவாக்க அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் நடைபெற்ற விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டத்தை இன்று காலை முதல்வர் ஜோசப் விஜய் தொடக்கிவைத்தார். பின்னர், பொதுமக்கள் மற்றும் இளைஞர்களுடன் இணைந்து ஓடி போதைப்பொருள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
இதனைத் தொடர்ந்து நடைபெற்ற கையெழுத்து இயக்கத்தில், **"ஓட தொடங்குங்கள், போதைப்பொருளை நிறுத்துங்கள், விளையாடத் தொடங்குங்கள், போதைப்பொருளை விடுங்கள்"** என்ற விழிப்புணர்வு வாசகத்தை எழுதி, "பிரியமுள்ள விஜய்" என கையெழுத்திட்டார்.
நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவரும் போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பான உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். போதைப்பொருள் பயன்பாட்டை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும் என்ற நோக்கில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.
இதையடுத்து, சமூக வலைதளமான எக்ஸ் தளத்தில் இளைஞர்களுக்கு முக்கிய அறிவுரையையும் முதல்வர் ஜோசப் விஜய் பகிர்ந்துள்ளார்.
அவர் வெளியிட்ட பதிவில், "இளைஞர்களின் எதிர்காலத்தை பாதுகாக்கவும், குற்றங்களைத் தடுக்கவும், போதைப்பொருள் இல்லாத தமிழ்நாட்டை உருவாக்கவும், போதைப்பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்து பரவலான விழிப்புணர்வை ஏற்படுத்துவது மிகவும் அவசியம்" என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், கல்வி, விளையாட்டு, திறன் மேம்பாடு உள்ளிட்ட ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளில் இளைஞர்களை அதிகமாக ஈடுபடுத்துவதன் மூலமும், கடுமையான சட்ட நடவடிக்கைகள் மற்றும் சமூகத்தின் ஒட்டுமொத்த ஒத்துழைப்பின் மூலமும் போதைப்பொருள் பயன்பாட்டை ஒழித்து வலிமையான சமுதாயத்தை உருவாக்க முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.
போதைப்பொருள் தொடர்பான குற்றங்களை தடுக்கும் வகையில் தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வரும் பல்வேறு நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும், போதைப்பொருள் இல்லாத, பாதுகாப்பான மற்றும் ஆரோக்கியமான தமிழ்நாட்டை உருவாக்க அனைவரும் உறுதியேற்க வேண்டும் என்றும் முதல்வர் ஜோசப் விஜய் தனது பதிவில் அழைப்பு விடுத்துள்ளார்.
Prasanth Subramani