கொடைக்கானல் பேரிஜம் ஏரியில் புலிகள் நடமாட்டம்.. சுற்றுலாப் பயணிகளுக்கு கட்டுப்பாடு!
கொடைக்கானல் அருகே உள்ள பேரிஜம் ஏரி பகுதியில் மூன்று புலிகள் சுற்றித்திரியும் வீடியோ வெளியாகியதைத் தொடர்ந்து, சுற்றுலாப் பயணிகளின் நுழைவுக்கு வனத்துறை கட்டுப்பாடுகள் விதித்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே உள்ள பேரிஜம் ஏரி பகுதியில் புலிகள் நடமாட்டம் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, சுற்றுலாப் பயணிகளின் நுழைவுக்கு தமிழ்நாடு வனத்துறை கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
கொடைக்கானலில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றாக பேரிஜம் ஏரி விளங்குகிறது. இந்த ஏரியை காண தமிழ்நாட்டின் பல மாவட்டங்களிலிருந்தும், அண்டை மாநிலங்களிலிருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர்.
பேரிஜம் ஏரி வனப்பகுதிக்குள் செல்ல சுற்றுலாப் பயணிகள் வனத்துறையின் அனுமதி பெறுவது கட்டாயமாகும். இந்த நிலையில், சமீபத்தில் சுற்றுலாப் பயணிகள் எடுத்த வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலானது.
அந்த வீடியோவில் மூன்று புலிகள் வனப்பகுதியில் சுற்றித்திரியும் காட்சிகள் பதிவாகியிருந்தன. இந்த சம்பவம் சுற்றுலாப் பயணிகளிடையே அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இதனைத் தொடர்ந்து, பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பேரிஜம் ஏரி பகுதிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு வனத்துறை புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. மேலும், வனப்பகுதியில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
புலிகள் இயற்கை வாழ்விடங்களில் சுதந்திரமாகச் சுற்றித் திரிவதால், பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பு விதிகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் எனவும் வனத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
Prasanth Subramani