அமெரிக்க விமான சாகச நிகழ்ச்சியில் 2 போர் விமானங்கள் மோதி விபத்து!
அமெரிக்காவின் ஐடஹோவில் நடைபெற்ற விமான சாகச நிகழ்ச்சியில் இரண்டு இஏ-18ஜி போர் விமானங்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. 4 விமானிகளும் பாராசூட் மூலம் உயிர்தப்பினர்.
அமெரிக்காவில் நடைபெற்ற விமான சாகச நிகழ்ச்சியின் போது இரண்டு போர் விமானங்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் ஐடஹோ மாநிலத்தில் உள்ள மவுண்டன் ஹோம் விமானப்படைத் தளம் அருகே ‘கன்ஃபைட்டர் ஸ்கைஸ்’ என்ற விமானக் கண்காட்சியின் இறுதி நாள் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான இஏ-18ஜி ரக இரண்டு போர் விமானங்கள் சாகச நிகழ்ச்சியில் ஈடுபட்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
விபத்து ஏற்பட்ட உடனே விமானங்களில் இருந்த 4 விமானிகளும் அவசரமாக பாராசூட் மூலம் வெளியேறியதால் உயிர்தப்பினர். அவர்களின் உடல்நிலை சீராக இருப்பதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து, கீழே விழுந்த விமானங்கள் தீப்பற்றி எரிந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. பாதுகாப்பு காரணங்களுக்காக விமான சாகச நிகழ்ச்சி உடனடியாக பாதியிலேயே நிறுத்தப்பட்டது. மேலும், மவுண்டன் ஹோம் விமானப்படைத் தளமும் தற்காலிகமாக மூடப்பட்டது.
இந்த விபத்து குறித்து அமெரிக்க பாதுகாப்புப் படை அதிகாரிகள் தீவிர விசாரணையை தொடங்கியுள்ளனர். விபத்திற்கான காரணம் குறித்து தொழில்நுட்ப நிபுணர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.
முன்னதாக, கடந்த 2018ஆம் ஆண்டு நடைபெற்ற ‘கன்ஃபைட்டர் ஸ்கைஸ்’ விமான சாகச நிகழ்ச்சியிலும் விபத்து ஏற்பட்டிருந்தது. அந்த விபத்தில் மிதவை விமானம் ஒன்று கீழே விழுந்ததில் விமானி உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
Prasanth Subramani