EPFO இணையதளம் 3 நாட்களுக்கு முடக்கம்.. PF பணம் எடுக்க முடியாது.. முக்கிய அறிவிப்பு!
EPFO இணையதளம் தொழில்நுட்ப மேம்பாட்டு பணிகளுக்காக ஜூன் 28 வரை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. இதனால் PF பணம் எடுப்பது, முன்பணம் பெறுவது உள்ளிட்ட அனைத்து ஆன்லைன் சேவைகளும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.
ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் (EPFO) அதிகாரப்பூர்வ இணையதளம் தொழில்நுட்ப மேம்பாட்டு பணிகளுக்காக தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளது. இதனால், PF கணக்குதாரர்கள் பணம் எடுப்பது, முன்பணம் கோருவது உள்ளிட்ட அனைத்து ஆன்லைன் சேவைகளும் குறிப்பிட்ட காலத்திற்கு கிடைக்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் கோடிக்கணக்கான ஊழியர்கள் தங்களின் வருங்கால வைப்பு நிதியை (PF) EPFO மூலம் நிர்வகித்து வருகின்றனர். PF பணம் திரும்பப் பெறுதல், முன்பணம் பெறுதல், கோரிக்கை சமர்ப்பித்தல் உள்ளிட்ட பல்வேறு சேவைகள் EPFO இணையதளம் மற்றும் ஆன்லைன் தளங்கள் வழியாக வழங்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், மென்பொருள் மற்றும் தரவுத்தள மேம்பாட்டு பணிகளை மேற்கொள்வதற்காக ஜூன் 26 நள்ளிரவு 12 மணி முதல் ஜூன் 28 இரவு 11.59 மணி வரை EPFO-வின் அனைத்து ஆன்லைன் சேவைகளும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.
இந்த காலகட்டத்தில் உறுப்பினர்கள் புதிய PF பணம் பெறும் கோரிக்கை, முன்பணம் (Advance) கோரிக்கை அல்லது பிற சேவைகள் தொடர்பான விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க முடியாது. மேலும், ஏற்கனவே சமர்ப்பிக்கப்பட்ட முன்பண கோரிக்கைகளும் இந்த காலத்தில் செயல்படுத்தப்படாது என்று EPFO தெரிவித்துள்ளது.
இருப்பினும், தொழில்நுட்ப மேம்பாட்டுப் பணிகள் நிறைவடைந்தவுடன், முன்பே பதிவு செய்யப்பட்ட கோரிக்கைகள் முன்னுரிமை அடிப்படையில் உடனடியாக செயல்படுத்தப்பட்டு, உறுப்பினர்களின் வங்கிக் கணக்குகளில் தொகை வரவு வைக்கப்படும் என்றும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
EPFO சேவைகளின் வேகம், பாதுகாப்பு மற்றும் தரத்தை மேலும் மேம்படுத்தும் நோக்கில் இந்த தொழில்நுட்ப பணிகள் மேற்கொள்ளப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், ஜூன் 29 அதிகாலை 12 மணி முதல் EPFO இணையதளம் மற்றும் அதன் அனைத்து ஆன்லைன் சேவைகளும் வழக்கம்போல் மீண்டும் செயல்பாட்டுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, PF தொடர்பான அவசர சேவைகளை பயன்படுத்த விரும்பும் உறுப்பினர்கள் ஜூன் 29-க்கு பிறகு தங்களது கோரிக்கைகளை பதிவு செய்யுமாறு EPFO கேட்டுக்கொண்டுள்ளது.
Prasanth Subramani