குஜராத்திடம் படுதோல்வி அடைந்த சிஎஸ்கே.. பிளே ஆஃப் கனவு முடிவு!

ஐபிஎல் 2026 தொடரின் 66ஆவது போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியிடம் 89 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, லீக் சுற்றுடன் வெளியேறியது.

குஜராத்திடம் படுதோல்வி அடைந்த சிஎஸ்கே.. பிளே ஆஃப் கனவு முடிவு!

ஐபிஎல் 2026 தொடரின் 66ஆவது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, குஜராத் டைட்டன்ஸ் அணியிடம் 89 ரன்கள் வித்தியாசத்தில் மோசமாகத் தோல்வியடைந்து பிளே ஆஃப் வாய்ப்பை இழந்துள்ளது.

பிளே ஆஃப் சுற்றுக்கான மெல்லிய நம்பிக்கையுடன் களமிறங்கிய சிஎஸ்கே அணிக்கு இந்தப் போட்டியில் வெற்றி அவசியமாக இருந்தது. ஆனால் பெரிய தோல்வியை சந்தித்ததால் லீக் சுற்றுடன் தொடரிலிருந்து வெளியேறியுள்ளது.

இதன் மூலம் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி லீக் சுற்றிலேயே வெளியேறியுள்ளது. மறுபுறம், இந்த அபார வெற்றியின் மூலம் குஜராத் டைட்டன்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் முதல் இரண்டு இடங்களை உறுதி செய்துள்ளது.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற சிஎஸ்கே அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. குஜராத் அணிக்காக தொடக்க வீரர்களான சாய் சுதர்சன் மற்றும் ஷுப்மன் கில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

முதல் விக்கெட்டுக்கு 125 ரன்கள் சேர்த்த இந்த ஜோடியில், ஷுப்மன் கில் 37 பந்துகளில் 64 ரன்கள் எடுத்தார். தொடர்ந்து ஜாஸ் பட்லர் மற்றும் சாய் சுதர்சன் இணைந்து சென்னை பந்துவீச்சாளர்களை சிதறடித்தனர்.

சாய் சுதர்சன் 53 பந்துகளில் 84 ரன்கள் எடுத்தார். ஜாஸ் பட்லர் 27 பந்துகளில் 57 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இதன் மூலம் குஜராத் டைட்டன்ஸ் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 229 ரன்கள் குவித்தது.

230 ரன்கள் என்ற கடின இலக்கை நோக்கி களமிறங்கிய சென்னை அணி தொடக்கம் முதலே தடுமாறியது. சஞ்சு சாம்சன் டக் அவுட் ஆனார். ருதுராஜ் கெய்க்வாட் 16 ரன்களிலும், மேத்யூ ஷார்ட் 24 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

63 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்த நிலையில், ஷிவம் துபே மட்டும் சற்றே அதிரடியாக விளையாடி 17 பந்துகளில் 47 ரன்கள் எடுத்தார். ஆனால் மற்ற வீரர்கள் நிலைத்து நிற்கத் தவறினர்.

இறுதியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 13.4 ஓவர்களில் 140 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியடைந்தது.

குஜராத் அணியின் பந்துவீச்சில் முகமது சிராஜ், ககிசோ ரபாடா மற்றும் ரஷீத் கான் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

இந்த தோல்வியால் சிஎஸ்கே ரசிகர்கள் கடும் ஏமாற்றமடைந்துள்ளனர்.