பஞ்சாப் கிங்ஸை வீழ்த்தி முதல் அணியாக பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிய ஆர்சிபி!
ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸை 23 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, முதல் அணியாக பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றது. விராட் கோலி மற்றும் வெங்கடேஷ் ஐயர் அரைசதம் விளாசினர்.
ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற முக்கியமான லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று, இந்த சீசனில் முதல் அணியாக பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.
தரம்சாலாவில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய ஆர்சிபி அணி ஆரம்பத்திலிருந்தே அதிரடியாக விளையாடியது.
அணியின் நட்சத்திர வீரர்களான விராட் கோலி மற்றும் வெங்கடேஷ் ஐயர் இருவரும் அரைசதம் விளாசி ரசிகர்களை உற்சாகப்படுத்தினர். வெங்கடேஷ் ஐயர் 40 பந்துகளில் 73 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். அவரது இன்னிங்சில் 8 பவுண்டரிகளும் 4 சிக்ஸர்களும் இடம்பெற்றன.
அவரைத் தொடர்ந்து விராட் கோலி 37 பந்துகளில் 58 ரன்கள் எடுத்தார். தேவ்தத் படிக்கல் 45 ரன்களும், டிம் டேவிட் 28 ரன்களும் சேர்த்ததால், ஆர்சிபி அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 222 ரன்கள் குவித்தது.
பின்னர் 223 ரன்கள் என்ற கடின இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸ் அணி தொடக்கத்தில் சற்று தடுமாறியது. ஷஷாங் சிங் மட்டும் அதிரடியாக விளையாடி 27 பந்துகளில் 56 ரன்கள் எடுத்தார். இருப்பினும் மற்ற வீரர்கள் தேவையான அளவு கூட்டாண்மை அமைக்க முடியாததால், பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 199 ரன்கள் மட்டுமே எடுத்தது.
ஆர்சிபி தரப்பில் ராஷிக் சலாம் தர் 3 விக்கெட்டுகள் கைப்பற்றினார். புவனேஷ்வர் குமார் 2 விக்கெட்டுகள் எடுத்தார்.
இந்த வெற்றியின் மூலம், 13 போட்டிகளில் 9 வெற்றிகளைப் பெற்றுள்ள ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, ஐபிஎல் 2026 தொடரில் முதல் அணியாக பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்று அசத்தியுள்ளது.
Prasanth Subramani