அஷுதோஷ் அதிரடியில் ராஜஸ்தானை வீழ்த்திய டில்லி.. பிளே ஆஃப் நம்பிக்கை தொடர்கிறது!

ஐபிஎல் 2026 தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய டில்லி அணி, பிளே ஆஃப் வாய்ப்பை தக்கவைத்தது. ராகுல், அபிஷேக் போரெல் அரைசதம் விளாச, அஷுதோஷ் சர்மா கடைசியில் அதிரடி காட்டினார்.

அஷுதோஷ் அதிரடியில் ராஜஸ்தானை வீழ்த்திய டில்லி.. பிளே ஆஃப் நம்பிக்கை தொடர்கிறது!

டில்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் 2026 லீக் போட்டியில் டில்லி கேபிடல்ஸ் அணி, ராஜஸ்தான் ராயல்ஸை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி பிளே ஆஃப் நம்பிக்கையை தொடர்ந்து தக்கவைத்தது.

டாஸ் வென்ற டில்லி அணி கேப்டன் அக்சர் படேல் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணிக்கு யாஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆரம்பத்திலேயே ஏமாற்றம் அளித்தார்.

ஆனால் இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி அதிரடியாக விளையாடி 46 ரன்கள் எடுத்தார். துருவ் ஜுரெல் சிறப்பாக விளையாடி 53 ரன்கள் குவித்தார். கேப்டன் ரியான் பராக் 23 பந்துகளில் அரைசதம் விளாசி அசத்தினார்.

ஒரு கட்டத்தில் ராஜஸ்தான் அணி பெரிய ஸ்கோரை நோக்கி சென்ற நிலையில், மிட்செல் ஸ்டார்க் அபாரமாக பந்துவீசி ஆட்டத்தை மாற்றினார். 15வது ஓவரில் ரியான் பராக், பெரேய்ரா மற்றும் ரவி சிங் ஆகியோரின் விக்கெட்டுகளை கைப்பற்றி ராஜஸ்தானை சிக்கலில் ஆழ்த்தினார்.

இறுதியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர்களில் 193/8 ரன்கள் எடுத்தது. டில்லி தரப்பில் மிட்செல் ஸ்டார்க் 4 விக்கெட்டுகள் கைப்பற்றி அசத்தினார்.

பின்னர் 194 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய டில்லி அணிக்கு அபிஷேக் போரெல் மற்றும் கே.எல்.ராகுல் ஜோடி அபார தொடக்கம் கொடுத்தது. அபிஷேக் போரெல் 51 ரன்கள் எடுத்தார். கே.எல்.ராகுல் 56 ரன்கள் விளாசி அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றார்.

இறுதிக்கட்டத்தில் அஷுதோஷ் சர்மா அதிரடியாக விளையாடினார். கடைசி ஓவரில் வெற்றிக்கு 7 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், ஆடம் மில்னே வீசிய முதல் பந்தை பவுண்டரிக்கும், அடுத்த பந்தை சிக்சருக்கும் அனுப்பி டில்லி அணியின் வெற்றியை உறுதி செய்தார்.

டில்லி அணி 19.2 ஓவர்களில் 197/5 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. அக்சர் படேல் 34 ரன்களுடன், அஷுதோஷ் சர்மா 18 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

இதன் மூலம் டில்லி கேபிடல்ஸ் அணி பிளே ஆஃப் சுற்று நம்பிக்கையை உயிர்ப்புடன் தக்கவைத்துள்ளது.

மேலும், இந்த சீசனில் அதிக சிக்சர்கள் அடித்த இந்திய வீரர்கள் பட்டியலில் ராஜஸ்தான் அணியின் வைபவ் சூர்யவன்ஷி புதிய சாதனை படைத்துள்ளார். அவர் இந்த சீசனில் 43 சிக்சர்கள் விளாசி முதலிடத்தை பிடித்துள்ளார்.