ஸ்வீடன் பயணத்தை முடித்து நார்வே புறப்பட்ட பிரதமர் மோடி!
ஐரோப்பிய நாடுகளுக்கான அரசு முறைப் பயணத்தின் ஒரு பகுதியாக ஸ்வீடன் பயணத்தை முடித்த பிரதமர் நரேந்திர மோடி நார்வேக்குப் புறப்பட்டார். இந்தியா - நார்வே மாநாட்டில் அவர் பங்கேற்கிறார்.
ஐரோப்பிய நாடுகளுக்கான அரசு முறைப் பயணத்தில் ஈடுபட்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, ஸ்வீடன் பயணத்தை முடித்துக் கொண்டு நார்வே நாட்டுக்குப் புறப்பட்டுள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை பிரதமர் மோடி நெதர்லாந்து நாட்டிற்கு அரசு முறைப் பயணமாக சென்றிருந்தார். இந்த பயணத்தின் போது இந்தியா மற்றும் நெதர்லாந்து இடையே சுமார் 17 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனைத் தொடர்ந்து, ஞாயிற்றுக்கிழமை மாலை ஸ்வீடன் சென்ற பிரதமர் மோடிக்கு அந்நாட்டின் உயரிய விருதுகளில் ஒன்றான “ராயல் ஆர்டர் ஆஃப் போலார் ஸ்டார் – டிகிரி கமாண்டர் கிரான்ட் கிராஸ்” விருது வழங்கப்பட்டது.
மேலும், இந்தியா மற்றும் ஸ்வீடன் இடையேயான வர்த்தகம், தொழில்நுட்பம், புதுமை மற்றும் பல்வேறு துறைகளில் இருநாட்டு உறவுகளை வலுப்படுத்துவது குறித்து முக்கிய ஆலோசனைகள் நடைபெற்றன. கடந்த 2025 ஆம் ஆண்டில் மட்டும் இருநாடுகளுக்கிடையேயான வர்த்தகம் 7.75 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், ஸ்வீடன் பயணத்தை நிறைவு செய்த பிரதமர் மோடி திங்கள்கிழமை காலை நார்வே நாட்டுக்குப் புறப்பட்டார். சுமார் 43 ஆண்டுகளுக்குப் பிறகு நார்வேக்கு செல்லும் இந்திய பிரதமர் என்ற சிறப்பையும் இந்த பயணம் பெற்றுள்ளது.
நார்வேயில் நடைபெறும் இந்தியா - நார்வே மாநாட்டில் பிரதமர் மோடி கலந்துகொண்டு உரையாற்ற உள்ளார். இந்த மாநாட்டில் நார்வே, டென்மார்க், ஃபின்லாந்து, ஐஸ்லாந்து மற்றும் ஸ்வீடன் ஆகிய நாடுகளின் பிரதமர்களும் பங்கேற்கின்றனர்.
மேலும், இரண்டு நாள் நார்வே பயணத்தின் போது அந்நாட்டு மன்னர் ஐந்தாம் ஹாரால்டு மற்றும் ராணி சோஞ்சா ஆகியோரை பிரதமர் மோடி சந்திக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பிய நாடுகளுடன் இந்தியாவின் அரசியல், பொருளாதார மற்றும் தொழில்நுட்ப உறவுகளை மேம்படுத்தும் நோக்கில் நெதர்லாந்து, ஸ்வீடன், நார்வே மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளுக்கு பிரதமர் மோடி அரசு முறைப் பயணம் மேற்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Prasanth Subramani