“இந்தியாவுக்கு Coding கற்றுத் தந்த மனிதர்”.. பேராசிரியர் இ. பாலகுருசாமியின் வாழ்க்கை திரைப்படமாகிறது!
இந்தியாவின் பிரபல கல்வியாளர் பேராசிரியர் இ. பாலகுருசாமியின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு பெரிய பட்ஜெட் திரைப்படம் உருவாகிறது. About Films நிறுவனம் அதிகாரப்பூர்வ உரிமையை பெற்றுள்ளது.
இந்தியாவில் கோடிக்கணக்கான மாணவர்களுக்கு Programming மற்றும் Engineering கல்வியை எளிமையாக கற்றுத்தந்த புகழ்பெற்ற கல்வியாளர் பேராசிரியர் இ. பாலகுருசாமியின் வாழ்க்கை தற்போது திரைப்படமாக உருவாக உள்ளது.
மும்பையைச் சேர்ந்த About Films நிறுவனம், பேராசிரியர் இ. பாலகுருசாமியின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட திரைப்படத்தை உருவாக்குவதற்கான அதிகாரப்பூர்வ உரிமையை பெற்றுள்ளதாக அறிவித்துள்ளது.
“He taught India how to code” என்ற வரியுடன் அறிவிக்கப்பட்டுள்ள இந்த திரைப்படம், ஒரு சாதாரண வாழ்க்கை வரலாற்றுப் படமாக அல்லாமல், இந்திய நடுத்தர குடும்பங்களின் கனவுகள், கல்வி மீதான நம்பிக்கை மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியின் உணர்வுபூர்வமான பயணமாக உருவாக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒருகாலத்தில் வேலைவாய்ப்பு குறைவு மற்றும் எதிர்காலம் குறித்த அச்சம் நிலவிய சூழலில், கல்வி மற்றும் தொழில்நுட்பம் வாழ்க்கையை மாற்றும் சக்தி என பேராசிரியர் பாலகுருசாமி நம்பினார். Coding என்ற சொல் பரவலாகப் பயன்படுத்தப்படுவதற்கு முன்பே, அவரது புத்தகங்கள் இந்தியா முழுவதும் உள்ள கல்லூரிகள், நூலகங்கள், விடுதிகள் மற்றும் மாணவர் வீடுகளுக்குள் சென்றடைந்தன.
அவரது புத்தகங்கள் மூலம் Programming கற்ற பல மாணவர்கள் பின்னர் இந்தியாவின் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியின் முக்கிய அங்கமாக மாறினர். இன்று இந்தியாவின் IT துறை நாட்டின் பொருளாதாரத்தில் முக்கிய பங்காற்றுவதோடு, கோடிக்கணக்கான நடுத்தர குடும்பங்களின் வாழ்க்கைத் தரத்தையும் உயர்த்தியுள்ளது.
இந்த திரைப்படத்தை தயாரிக்கும் அபிஷேக் தந்தாரியா கூறுகையில், “இது Coding அல்லது வகுப்பறைகள் பற்றிய கதை மட்டும் அல்ல. கல்வி தங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தை மாற்றும் என்று நம்பிய இந்திய குடும்பங்களின் கதை. பேராசிரியர் பாலகுருசாமி அந்த பயணத்தின் ஒரு பகுதியாக இருந்தார். குடும்பம் முழுவதும் சேர்ந்து பார்க்கக்கூடிய, உணர்ச்சிகரமான மற்றும் ஊக்கமளிக்கும் திரைப்படத்தை உருவாக்க விரும்புகிறோம்” என்றார்.
இந்த படத்தின் திரைக்கதையை ‘Physics Wallah’ தொடரின் படைப்பாளரும், ‘Criminal Justice: A Family Matter’ எழுத்தாளருமான சமீர் மிஷ்ரா உருவாக்கி வருகிறார்.
மேலும், தயாரிப்பாளர் அபிஷேக் தந்தாரியா மற்றும் எழுத்தாளர் சமீர் மிஷ்ரா இருவரும் IIT கான்பூர் மற்றும் IIT மும்பை போன்ற முன்னணி கல்வி நிறுவனங்களுடன் தொடர்புடையவர்கள் என்பதால், இந்திய Engineering கலாசாரம் மற்றும் நடுத்தர மக்களின் கனவுகளை ஆழமாக புரிந்துகொண்ட குழுவாக இந்த திட்டம் பார்க்கப்படுகிறது.
தற்போது இந்த திரைப்படம் ஆராய்ச்சி மற்றும் திரைக்கதை உருவாக்க கட்டத்தில் உள்ளது. நடிகர்கள், இயக்குநர் மற்றும் தயாரிப்பு கால அட்டவணை தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Prasanth Subramani