எஸ்பிஐ வங்கி வேலைநிறுத்தம் திடீர் ஒத்திவைப்பு.. மே 25, 26-ல் அனைத்து சேவைகளும் வழக்கம்போல்!
மே 25 மற்றும் 26 தேதிகளில் நடைபெற இருந்த எஸ்பிஐ வங்கி ஊழியர்களின் நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அனைத்து வங்கி சேவைகளும் வழக்கம்போல் செயல்படும்.
மே 25 மற்றும் 26 தேதிகளில் நடைபெறவிருந்த எஸ்பிஐ வங்கி ஊழியர்களின் நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டம் திடீரென ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஊழியர்கள் பற்றாக்குறை, பணிச்சுமை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பாரத ஸ்டேட் வங்கி (SBI) ஊழியர்கள் இரண்டு நாட்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட இருப்பதாக முன்பு அறிவித்திருந்தனர். இந்த அறிவிப்பு வங்கி வாடிக்கையாளர்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியது.
இதையடுத்து, வேலைநிறுத்த நாள்களில் வாடிக்கையாளர்கள் ஏடிஎம் சேவைகள், YONO SBI மொபைல் செயலி, யுபிஐ மற்றும் இன்டர்நெட் பேங்கிங் வசதிகளை பயன்படுத்திக் கொள்ளுமாறு அகில இந்திய பாரத ஸ்டேட் வங்கி ஊழியர் கூட்டமைப்பு அறிவுறுத்தியிருந்தது.
இந்நிலையில், ஊழியர்களின் கோரிக்கைகளை பரிசீலிப்பதாக வங்கி நிர்வாகம் உறுதியளித்ததைத் தொடர்ந்து, போராட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக எஸ்பிஐ ஊழியர் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
இதனால் மே 25 மற்றும் 26 தேதிகளில் எஸ்பிஐ வங்கிகள் வழக்கம்போல செயல்படும் என்றும், அனைத்து வங்கி சேவைகளும் தடையின்றி கிடைக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
வேலைநிறுத்தம் ஒத்திவைக்கப்பட்டிருப்பதால், பணப் பரிவர்த்தனை, பணம் எடுப்பு, ஆன்லைன் வங்கி சேவைகள் உள்ளிட்ட அனைத்து சேவைகளும் சீராக நடைபெறும் என்பதால் வாடிக்கையாளர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.
Prasanth Subramani