சிபிஎஸ்இ முடிவால் மாணவர்கள் அதிர்ச்சி.. ரூ.69,420 மறுமதிப்பீட்டு கட்டண தகவல் வைரல்!
சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு முடிவுகளுக்குப் பிறகு, மறுமதிப்பீட்டு கட்டணமாக ரூ.69,420 காட்டப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவியது. தொழில்நுட்ப கோளாறே காரணம் என விளக்கம் வெளியாகியுள்ளது.
சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியானதிலிருந்து, மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் பல்வேறு குழப்பங்களும் அதிருப்திகளும் நிலவி வருகின்றன.
கடந்த மே 13-ஆம் தேதி வெளியான பிளஸ் 2 தேர்வு முடிவுகளில், இந்த ஆண்டு முதல் முறையாக ‘ஆன் ஸ்கிரீன் மார்க்கிங்’ (OSM) முறை அறிமுகப்படுத்தப்பட்டது. இதில், ஆசிரியர்கள் விடைத்தாள்களை நேரடியாக திருத்தாமல், ஸ்கேன் செய்யப்பட்ட பிரதிகளை கணினி மூலம் பார்த்து மதிப்பீடு செய்தனர்.
இந்த புதிய முறையால் தங்களது மதிப்பெண்கள் எதிர்பார்த்ததை விட மிகவும் குறைந்துள்ளதாக ஏராளமான மாணவர்கள் புகார் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, விடைத்தாள் நகல் பெறவும், ஆன்லைனில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்களை பார்வையிடவும் லட்சக்கணக்கானோர் விண்ணப்பித்து வருகின்றனர்.
ஆனால், ஆன்லைனில் கிடைக்கும் விடைத்தாள்களின் தரம் மங்கலாக இருப்பதாகவும், தெளிவாக பார்க்க முடியவில்லை என்றும் பல மாணவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
இதற்கிடையே, ஒரு பாடத்திற்கான மறுமதிப்பீட்டு கட்டணமாக ரூ.69,420 வசூலிக்கப்படும் என சிபிஎஸ்இ இணையதளத்தில் காட்டப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த தகவலின் ஸ்கிரீன்ஷாட்களும் வைரலானது.
ஆனால், அந்த தகவல் உண்மையல்ல என்றும், தொழில்நுட்ப கோளாறு காரணமாக தவறான தொகை காட்டப்பட்டதாகவும் பின்னர் விளக்கம் அளிக்கப்பட்டது. உண்மையில், விடைத்தாள் நகல் பெற ரூ.300 கட்டணமும், ஒவ்வொரு விடையையும் மறுமதிப்பீடு செய்ய ரூ.25 மட்டுமே வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தொழில்நுட்ப சிக்கல்களை கருத்தில் கொண்டு, பிளஸ் 2 விடைத்தாள்களின் ஸ்கேன் நகல்களைப் பெறுவதற்கான கடைசி தேதி மே 24 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
மே 19 முதல் தொடங்கிய மறுமதிப்பீட்டு விண்ணப்ப பதிவு இணையதளமும் தொடர்ந்து முடங்கிவருவதாக மாணவர்கள் குற்றம்சாட்டுகின்றனர். கட்டணம் செலுத்திய பின்னரும் விண்ணப்பங்கள் வெற்றிகரமாக பதிவு ஆகவில்லை என பலர் புகார் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து, அதிகளவிலான பயனர்கள் ஒரே நேரத்தில் இணையதளத்தை பயன்படுத்தியதும், அங்கீகரிக்கப்படாத குறுக்கீட்டு முயற்சிகளும் தொழில்நுட்ப பிரச்னைகளுக்கு காரணமாக இருக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
Prasanth Subramani