பெட்ரோல் ஏற்றுமதிக்கு கூடுதல் கலால் வரி உயர்வு.. மத்திய அரசு புதிய அறிவிப்பு!

இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் பெட்ரோலுக்கு லிட்டருக்கு ரூ.3 சிறப்பு கூடுதல் கலால் வரி உயர்த்தப்பட்டுள்ளது. டீசல் மற்றும் விமான எரிபொருள் மீதான வரி குறைக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

பெட்ரோல் ஏற்றுமதிக்கு கூடுதல் கலால் வரி உயர்வு.. மத்திய அரசு புதிய அறிவிப்பு!

இந்தியாவிலிருந்து பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பெட்ரோல் மீதான சிறப்பு கூடுதல் கலால் வரியை லிட்டருக்கு ரூ.3 உயர்த்தி மத்திய அரசு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

மேற்காசிய பகுதியில் நீடித்து வரும் போர் சூழல், உலகளாவிய கச்சா எண்ணெய் விலையேற்றம் மற்றும் எண்ணெய் நிறுவனங்களுக்கு ஏற்பட்டுள்ள அழுத்தம் காரணமாக நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நேற்று (மே 15) அதிகாலை உயர்த்தப்பட்டது.

சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.2.83 உயர்ந்து ரூ.103.67 ஆகவும், டீசல் விலை ரூ.2.86 உயர்ந்து ரூ.95.25 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

இதுகுறித்து மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல், “பெட்ரோல் மற்றும் டீசல் விலையை மிகக் குறைந்த அளவிலேயே பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு உயர்த்தியுள்ளது” என்று தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து, இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் பெட்ரோலுக்கு விதிக்கப்படும் சிறப்பு கூடுதல் கலால் வரி லிட்டருக்கு ரூ.3 உயர்த்தப்பட்டுள்ளது.

அதே நேரத்தில், டீசல் மற்றும் விமான எரிபொருள் மீதான சிறப்பு கூடுதல் கலால் வரி குறைக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய அரசு அறிவித்துள்ளது.

டீசல் ஏற்றுமதி மீதான சிறப்பு கூடுதல் கலால் வரி லிட்டருக்கு ரூ.23 இலிருந்து ரூ.16.50 ஆக குறைக்கப்பட்டுள்ளது. அதேபோல், விமான எரிபொருள் மீதான கலால் வரி ரூ.33 இலிருந்து ரூ.16 ஆக குறைக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய வரி விகிதங்கள் இன்று (மே 16) முதல் அடுத்த 15 நாட்களுக்கு அமலில் இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், உள்நாட்டுப் பயன்பாட்டிற்கான பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரி விகிதங்களில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்றும் மத்திய அரசு தெளிவுபடுத்தியுள்ளது.