சிங்கப் பெண் அதிரடிப் படைக்கு ரூ.354 கோடி ஒதுக்கீடு: 2,500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் என முதல்வர் விஜய் அறிவிப்பு

பெண்களின் பாதுகாப்பை வலுப்படுத்த உருவாக்கப்பட்டுள்ள சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப் படைக்கு முதல் கட்டமாக ரூ.354 கோடிக்கும் மேல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், இரண்டாவது கட்டத்தில் 2,500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் என்றும் முதல்வர் விஜய் தெரிவித்துள்ளார்.

சிங்கப் பெண் அதிரடிப் படைக்கு ரூ.354 கோடி ஒதுக்கீடு: 2,500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் என முதல்வர் விஜய் அறிவிப்பு

பெண்களின் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் தமிழ்நாடு காவல்துறையில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப் படை பிரிவை முதல்வர் ஜோசப் விஜய் இன்று தொடங்கி வைத்தார். சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் விளையாட்டரங்கில் நடைபெற்ற தொடக்க விழாவில் பேசிய அவர், இந்த திட்டத்திற்காக முதல் கட்டமாக ரூ.354 கோடிக்கும் மேல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவித்தார்.

மேலும், திட்டத்தின் இரண்டாவது கட்டத்தில் 2,500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்பட உள்ளதாகவும் தெரிவித்தார். பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நவீன ரோந்து வாகனங்கள், மேம்பட்ட தொழில்நுட்ப சாதனங்கள் மற்றும் கண்காணிப்பு வசதிகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

முதல்வராக கடந்த மே 10ஆம் தேதி பொறுப்பேற்ற ஜோசப் விஜய், தனது முதல் கையொப்பங்களில் ஒன்றாக சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப் படையை உருவாக்கும் ஆணையில் கையெழுத்திட்டிருந்தார். தற்போது அந்த திட்டம் அதிகாரப்பூர்வமாக செயல்பாட்டுக்கு வந்துள்ளது.

இந்த திட்டம் ஏற்கனவே பெண்களின் பாதுகாப்புக்காக செயல்பட்டு வரும் காவல் அமைப்புகளுக்கு கூடுதல் பலம் சேர்க்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடைபெறுவதற்கு முன்பே அவற்றைத் தடுக்கக்கூடிய முன்னெச்சரிக்கை காவல் அமைப்பாக இந்த அதிரடிப் படை செயல்படும் என்று அரசு விளக்கியுள்ளது.

ரோந்து பணிகள், குற்றத் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு பணிகளில் இந்த படை முக்கிய பங்கு வகிக்கும். இதன் மூலம் அனைத்து மகளிர் காவல் நிலையங்களும் குற்றவாளிகளுக்கு எதிராக விரைவான நடவடிக்கை எடுத்து, குற்றப்பத்திரிகைகளை தாக்கல் செய்வது உள்ளிட்ட சட்ட நடவடிக்கைகளில் கூடுதல் கவனம் செலுத்த முடியும் என கூறப்பட்டுள்ளது.

பெண்களை பின்தொடர்தல், பாலியல் தொல்லை, துன்புறுத்தல், கடத்தல் முயற்சி, பொதுஇடங்களில் அத்துமீறல், பேருந்துகள் மற்றும் கூட்டமான இடங்களில் பெண்களுக்கு ஏற்படும் தொந்தரவுகள் போன்ற குற்றங்களைத் தடுக்க இந்த சிங்கப் பெண் அதிரடிப் படை சிறப்பாக செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்தியாவில் முதல் முறையாக தமிழ்நாட்டில் டிரோன் தொழில்நுட்பம் மூலம் காவல்துறை ரோந்து பணிகள் மேற்கொள்ளப்படும் என்றும் முதல்வர் விஜய் அறிவித்தார். பெண்களின் பாதுகாப்பு மற்றும் கண்ணியத்தை உறுதி செய்வதே அரசின் முதன்மை நோக்கம் என்றும் அவர் வலியுறுத்தினார்.

தமிழ்நாட்டின் பெண்கள் எதிர்பார்க்கும் பாதுகாப்பான சூழலை உருவாக்க அரசு உறுதிபூண்டுள்ளதாகவும், பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க நவீன தொழில்நுட்பங்களுடன் கூடிய வலுவான பாதுகாப்பு அமைப்பை உருவாக்கும் முயற்சியில் இந்த சிங்கப் பெண் அதிரடிப் படை முக்கிய மைல்கல்லாக அமையும் என்றும் முதல்வர் விஜய் தெரிவித்தார்.