சென்னை தலைமைச் செயலகம் அருகே திடீர் புகைமூட்டம்.. சுவாசிக்க சிரமம், காரணம் என்ன?
சென்னை தலைமைச் செயலகம் மற்றும் துறைமுகப் பகுதியில் திடீரென புகைமூட்டம் ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது. சல்ஃபர் ரசாயனத்தில் இருந்து வெளியான புகையே காரணம் என துறைமுக நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.
சென்னை தலைமைச் செயலகம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் இன்று காலை திடீரென ஏற்பட்ட புகைமூட்டம் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
காலை சுமார் 11.30 மணியளவில் தலைமைச் செயலகம் அருகேயுள்ள பகுதிகளில் அடர்ந்த புகைமூட்டம் நிலவியதால், அங்கிருந்த மக்களுக்கு சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பலருக்கு கண் எரிச்சலும் ஏற்பட்டதால் அப்பகுதியில் நச்சுவாயு கலந்த புகை பரவியிருக்கலாம் என்ற அச்சம் எழுந்தது.
துறைமுகம் அருகிலுள்ள கடற்கரைப் பகுதியில் இருந்து துர்நாற்றத்துடன் புகை வெளியேறியதைத் தொடர்ந்து, தீயணைப்பு துறையினர் மற்றும் பாதுகாப்புப் படையினர் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.
பின்னர் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், சென்னை துறைமுகப் பகுதியில் ஏற்றுமதிக்காக சேமித்து வைக்கப்பட்டிருந்த சல்ஃபர் (Sulphur) ரசாயனக் குவியலில் இருந்து வெப்பத்தின் தாக்கத்தால் புகைமூட்டம் வெளியானது கண்டறியப்பட்டது.
இதையடுத்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
துறைமுக நிர்வாகம் விளக்கம்
இந்த சம்பவம் தொடர்பாக விளக்கம் அளித்த சென்னை துறைமுக நிர்வாகம், "தீ விபத்து எதுவும் ஏற்படவில்லை. அதிக வெயிலின் தாக்கத்தால் சல்ஃபர் ரசாயனத்திலிருந்து வாயு மற்றும் புகைமூட்டம் வெளியானது. நிலைமை தற்போது முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் உள்ளது" என்று தெரிவித்துள்ளது.
புகைமூட்டம் படிப்படியாக குறைவு
அதிகாரிகள் மேற்கொண்ட உடனடி நடவடிக்கைகளால் சல்ஃபர் ரசாயன வெளியேற்றம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதுடன், தலைமைச் செயலகம் மற்றும் துறைமுகப் பகுதிகளில் நிலவிய புகைமூட்டமும் படிப்படியாக குறைந்து வருகிறது.
இந்த சம்பவம் காரணமாக சில மணி நேரம் அப்பகுதியில் பரபரப்பு நிலவிய நிலையில், தற்போது பொதுமக்களுக்கு எந்த ஆபத்தும் இல்லை என அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்.
Prasanth Subramani