அப்பாச்சி ஹெலிகாப்டர் சுட்டு வீழ்த்தப்பட்டதற்கு பதிலடி: ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல்
ஹார்முஸ் நீரிணை அருகே அமெரிக்க அப்பாச்சி ஹெலிகாப்டர் சுட்டு வீழ்த்தப்பட்டதைத் தொடர்ந்து, ஈரானின் வான் பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் ராணுவ இலக்குகள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஹார்முஸ் நீரிணைக்கு அருகே அமெரிக்க ராணுவத்தின் அப்பாச்சி ஹெலிகாப்டர் சுட்டு வீழ்த்தப்பட்டதாக கூறப்படும் சம்பவத்தைத் தொடர்ந்து, ஈரானின் முக்கிய ராணுவ இலக்குகள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தி வருவதாக அமெரிக்க மத்திய தலைமையகம் (CENTCOM) அறிவித்துள்ளது.
அமெரிக்க மத்திய தலைமையகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, அமெரிக்க விமானப்படை மற்றும் கடற்படையின் போர் விமானங்கள் மூலம் துல்லியமான ஆயுதங்களைப் பயன்படுத்தி, ஹார்முஸ் நீரிணை அருகே உள்ள ஈரானின் வான் பாதுகாப்பு அமைப்புகள், தரைக் கட்டுப்பாட்டு நிலையங்கள் மற்றும் கண்காணிப்பு ரேடார் தளங்கள் மீது தற்காப்பு நடவடிக்கையாக தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த நடவடிக்கை குறித்து விளக்கம் அளித்த அமெரிக்க தரப்பு, ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த அமெரிக்கப் படைகள் மற்றும் அந்தப் பகுதியில் பயணித்த சர்வதேச வணிகக் கப்பல்கள் மீது ஈரானிய டிரோன்கள் மூலம் நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு பதிலடியாக இந்த ராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவித்துள்ளது.
மேலும், அமெரிக்க ராணுவத்தின் அப்பாச்சி ஹெலிகாப்டர் சுட்டு வீழ்த்தப்பட்ட சம்பவமும் இந்த தாக்குதலுக்கான முக்கிய காரணமாகக் கூறப்பட்டுள்ளது. பிராந்திய பாதுகாப்பை உறுதி செய்வதற்கான தனது உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்திய அமெரிக்க மத்திய தலைமையகம், ஈரானின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளுக்கு தகுந்த பதிலடி வழங்க அமெரிக்கப் படைகள் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளது.
அமெரிக்க அதிபர் Donald Trump இந்த நடவடிக்கை குறித்து கருத்து தெரிவிக்கையில், அப்பாச்சி ஹெலிகாப்டர் மீதான தாக்குதலுக்கு பதிலடியாக ஈரானின் பல முக்கிய ராணுவ இலக்குகள் மீது மிகவும் வலுவான மற்றும் திட்டமிட்ட தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருவதாக கூறியுள்ளார்.
மேலும், ஹெலிகாப்டரில் இருந்த இரு அமெரிக்க ராணுவ வீரர்களும் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த பதிலடி நடவடிக்கையில் மூன்று கட்டத் தாக்குதல்கள் இடம்பெற்றதாக அமெரிக்க அதிகாரிகள் கூறியுள்ளனர்.
மேற்கு ஆசியாவில் நிலவும் பதற்றத்தை குறைத்து அமைதிப் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண முயற்சிகள் நடைபெற்று வரும் சூழலில் இந்த தாக்குதல்கள் நடைபெற்றுள்ளன. குறிப்பாக, ஈரானுடனான அமைதிப் பேச்சுவார்த்தைகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக டிரம்ப் கூறிய சில மணி நேரங்களிலேயே இந்த ராணுவ நடவடிக்கை நடைபெற்றிருப்பது சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளது.
இந்த சம்பவம் வாஷிங்டன் மற்றும் தெஹ்ரான் இடையிலான பதற்றத்தை மீண்டும் தீவிரப்படுத்தியுள்ளதுடன், மேற்கு ஆசியாவில் புதிய பாதுகாப்பு சவால்களை உருவாக்கும் வாய்ப்பும் இருப்பதாக அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். மேலும், இந்த மோதல் அமைதிப் பேச்சுவார்த்தை முயற்சிகளுக்கு பின்னடைவை ஏற்படுத்தக்கூடும் என்ற அச்சமும் எழுந்துள்ளது.
Prasanth Subramani