மெட்டாவில் அதிரடி பணி நீக்கம்.. 8 ஆயிரம் ஊழியர்களுக்கு இமெயில் மூலம் அதிர்ச்சி!
ஏஐ துறையில் அதிக முதலீடு செய்யும் திட்டத்தின் ஒரு பகுதியாக மெட்டா நிறுவனம் 8 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளது. அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் சிங்கப்பூர் ஊழியர்களுக்கு இமெயில் மூலம் தகவல் அனுப்பப்பட்டது.
பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ் அப் நிறுவனங்களின் தாய் நிறுவனமான மெட்டா, 8 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நடவடிக்கை உலக தொழில்நுட்ப துறையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தில் அதிக கவனம் செலுத்தி வரும் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள், அந்த துறையில் பெரும் முதலீடுகளை செய்து வருகின்றன. இதன் காரணமாக செலவுகளை குறைக்கும் நோக்கில் பல நிறுவனங்கள் ஆட்குறைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன.
அதன்படி, மெட்டா நிறுவனம் இந்த ஆண்டு ஏஐ துறையில் 125 முதல் 145 பில்லியன் அமெரிக்க டாலர் வரை முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், மெட்டா நிறுவனம் இன்று 8 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளது. முதலில் அமெரிக்கா மற்றும் பிரிட்டனில் பணியாற்றும் ஊழியர்களுக்கு வீட்டிலிருந்தே பணியாற்றுமாறு அறிவிக்கப்பட்டது. பின்னர் அவர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக இமெயில் மூலம் தகவல் அனுப்பப்பட்டது.
சிங்கப்பூரில் பணிபுரியும் ஊழியர்களுக்கு அதிகாலை 4 மணியளவில் பணி நீக்க அறிவிப்பு அனுப்பப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், 7 ஆயிரம் ஊழியர்கள் ஏஐ தொடர்பான துறைகளுக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும், 6 ஆயிரம் காலிப்பணியிடங்கள் நிரந்தரமாக நீக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த பணி நீக்க நடவடிக்கைகளில் பொறியியல் மற்றும் விற்பனை பிரிவுகளில் பணிபுரியும் ஊழியர்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த சில நாட்களாகவே மெட்டா நிறுவனத்தில் பணி நீக்கம் ஏற்படும் என்ற அச்சம் ஊழியர்களிடையே நிலவியதாக கூறப்படுகிறது. இதனால் அலுவலகங்களில் வழங்கப்பட்ட இலவச சிற்றுண்டிகள் மற்றும் லேப்டாப் சார்ஜர்கள் போன்ற பொருட்களை ஊழியர்கள் அதிகளவில் எடுத்துச் சென்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும், ஊழியர்களின் லேப்டாப்களில் புதிய மென்பொருள் ஒன்றை மெட்டா நிறுவனம் நிறுவியுள்ளதாகவும், அதன் மூலம் கீபோர்டு மற்றும் மவுஸ் பயன்பாட்டை கண்காணித்து, எதிர்காலத்தில் அந்த பணிகளை ஏஐ மூலம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சில ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Prasanth Subramani