தமிழகத்தில் 4 நாட்களுக்கு மழை.. பல மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!
தமிழகத்தின் பல மாவட்டங்களில் அடுத்த 4 நாட்களுக்கு இடி, மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சில மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் பல மாவட்டங்களில் அடுத்த 4 நாட்களுக்கு இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சில மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் இருந்து மத்திய வங்கக்கடல் வரை லட்சத்தீவு, வடக்கு கேரளம், தெற்கு உள் கர்நாடகா மற்றும் ஆந்திர பிரதேசம் வழியாக வளிமண்டல காற்றழுத்த தாழ்வு பாதை நிலவி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, மே 20 மற்றும் 21ஆம் தேதிகளில் கோயம்புத்தூர் மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி, ஈரோடு மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்றுடன் கனமழை பெய்யக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
மேலும், தமிழகத்தின் பல பகுதிகளிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.
மே 22ஆம் தேதி சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், திருச்சி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, வேலூர், ஈரோடு மற்றும் நீலகிரி மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மே 23ஆம் தேதியும் தமிழகத்தின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் மிதமான மழை தொடரும் என கணிக்கப்பட்டுள்ளது.
அதிகபட்ச வெப்பநிலையைப் பொறுத்தவரை, மே 20 முதல் 24ஆம் தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வெப்பநிலையில் பெரிய மாற்றம் இருக்க வாய்ப்பு இல்லை என்றும், வட கடலோர தமிழகத்தில் மட்டும் சற்று அதிகரிக்கக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரத்தில், அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் காரணமாக வட கடலோர தமிழகத்தின் சில பகுதிகளில் அசவுகரியம் ஏற்படக்கூடும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரை, இன்று மற்றும் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 39 முதல் 40 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸாகவும் இருக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Prasanth Subramani