தமிழகத்தில் மே 19 வரை கனமழை நீடிக்கும்.. வானிலை மையம் எச்சரிக்கை

தமிழ்நாட்டில் மே 19 வரை பல மாவட்டங்களில் இடி மின்னலுடன் கனமழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் மே 19 வரை கனமழை நீடிக்கும்.. வானிலை மையம் எச்சரிக்கை

தமிழ்நாட்டில் மே 19-ஆம் தேதி வரை பல்வேறு மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மே 14-ஆம் தேதி தமிழகத்தின் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

மேலும், கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர், தேனி மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மே 15-ஆம் தேதி கோயம்புத்தூர் மலைப்பகுதிகள், நீலகிரி, ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.

மே 16-ஆம் தேதி நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் கனமழை தொடரும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.

அதனைத் தொடர்ந்து மே 17, 18 மற்றும் 19 ஆகிய தேதிகளில் நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மற்றும் தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.

அதிகபட்ச வெப்பநிலையைப் பொறுத்தவரை, இன்று முதல் மே 18 வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் குறிப்பிடத்தக்க மாற்றம் இருக்காது என்றும், வெப்பநிலை இயல்பை ஒட்டியே இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையைப் பொருத்தவரை, இன்றும் நாளையும் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

மேலும், சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 35° செல்சியஸையும், குறைந்தபட்ச வெப்பநிலை 28 முதல் 29° செல்சியஸையும் ஒட்டியிருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.