தமிழகத்தின் 22 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை.. இன்று இடி, மின்னலுடன் பலத்த மழை!
தமிழ்நாட்டின் 22 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் இன்று (ஜூன் 2) 22 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் தெற்கு கேரள கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் நிலவும் வளிமண்டல சுழற்சி மற்றும் வடக்கு தமிழகம் வரை நீளும் காற்றழுத்த தாழ்வு பாதை காரணமாக இந்த மழை ஏற்படும் என கூறப்பட்டுள்ளது.
இன்று கனமழை பெய்யக்கூடிய 22 மாவட்டங்கள்
இன்று நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி, கரூர், நாமக்கல், ஈரோடு, சேலம், திருச்சிராப்பள்ளி, தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, மதுரை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்றுடன் கனமழை பெய்யக்கூடும்.
ஜூன் 3 மற்றும் 4-ஆம் தேதிகளுக்கான எச்சரிக்கை
நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திருப்பூர், தென்காசி, திண்டுக்கல், திருநெல்வேலி, கன்னியாகுமரி, ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் கனமழை தொடரும் வாய்ப்பு உள்ளது.
ஜூன் 5-ஆம் தேதி எந்த மாவட்டங்களில் மழை?
நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, திண்டுக்கல், தூத்துக்குடி, விருதுநகர், ஈரோடு, சேலம், கள்ளக்குறிச்சி, சிவகங்கை, மதுரை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மற்றும் காரைக்கால் பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும்.
சென்னை வானிலை
சென்னையில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 39 முதல் 40 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகலாம்.
வெப்பநிலை நிலவரம்
ஜூன் 2 முதல் 6 வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வெப்பநிலையில் பெரிய மாற்றம் இருக்காது. இருப்பினும் வடக்கு உள் தமிழகத்தின் சில பகுதிகளில் இயல்பை விட 2 டிகிரி செல்சியஸ் வரை அதிக வெப்பநிலை பதிவாகக்கூடும்.
மீனவர்களுக்கு முக்கிய எச்சரிக்கை
தென் தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்திலும், இடையிடையே 60 கிலோமீட்டர் வேகத்திலும் சூறாவளிக் காற்று வீசக்கூடும். எனவே ஜூன் 2 அன்று மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.
மழை மற்றும் பலத்த காற்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், பொதுமக்கள் பாதுகாப்புடன் இருக்கவும், தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Prasanth Subramani