பிலிப்பின்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: கட்டடங்கள் இடிந்து ஒருவர் பலி, பலர் காயம்

பிலிப்பின்ஸின் மின்டானோ பகுதியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் பல கட்டடங்கள் சேதமடைந்தன. இதில் ஒருவர் உயிரிழந்ததாகவும், நான்கு பேர் காயமடைந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

பிலிப்பின்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: கட்டடங்கள் இடிந்து ஒருவர் பலி, பலர் காயம்

பிலிப்பின்ஸில் திங்கள்கிழமை அதிகாலை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் பல கட்டடங்கள் சேதமடைந்ததுடன், ஒருவர் உயிரிழந்ததாகவும், நான்கு பேர் காயமடைந்ததாகவும் முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

தெற்கு பிலிப்பின்ஸின் மின்டானோ மாகாணத்தில் உள்ள சரங்கனி பகுதிக்கு மேற்கே சுமார் 24 கிலோமீட்டர் தொலைவில் இந்திய நேரப்படி அதிகாலை 5.07 மணியளவில் முதல் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் பூமிக்கடியில் சுமார் 93 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாகவும், ரிக்டர் அளவுகோலில் 7.8 ஆக பதிவானதாகவும் தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

முதல் நிலநடுக்கம் ஏற்பட்ட சுமார் இரண்டு மணி நேரத்திற்குப் பிறகு, மற்றொரு சக்திவாய்ந்த நிலநடுக்கமும் பதிவானது. இந்த இரண்டாவது நிலநடுக்கம் பூமிக்கடியில் 79 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்ததுடன், ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆக பதிவாகியுள்ளது.

தொடர்ச்சியாக ஏற்பட்ட இந்த நில அதிர்வுகளால் பல கட்டடங்கள் சேதமடைந்துள்ளன. சில கட்டடங்கள் இடிந்து விழுந்ததாகவும், மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மீட்புப் பணிகள் முழுமையாக நிறைவடைந்த பிறகே உயிரிழப்புகள் மற்றும் சேதங்கள் குறித்த முழுமையான விவரங்கள் வெளியாகும் என கூறப்படுகிறது.

நிலநடுக்கத்தின் தாக்கத்தால் கட்டடங்கள் குலுங்கியதும், சில இடங்களில் கட்டடங்கள் இடிந்து விழுந்ததும் தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன.

இந்நிலையில், பிலிப்பின்ஸ் நில அதிர்வு மையம் தொடர்ந்து எச்சரிக்கை விடுத்துள்ளது. பூமியின் மேற்பரப்பில் இருந்து 700 கிலோமீட்டர் ஆழம் வரை பல்வேறு பகுதிகளில் மேலும் நிலநடுக்கங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து பிலிப்பின்ஸ் மற்றும் இந்தோனேசியா கடற்கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

பொதுவாக 0 முதல் 70 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்படும் நிலநடுக்கங்கள் மேலோட்டமானவை என்றும், 70 முதல் 300 கிலோமீட்டர் வரை ஏற்படுபவை இடைநிலை நிலநடுக்கங்கள் என்றும், 300 முதல் 700 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்படுபவை ஆழமான நிலநடுக்கங்கள் என்றும் வகைப்படுத்தப்படுகின்றன. 70 கிலோமீட்டருக்கு மேல் ஆழத்தில் உருவாகும் நிலநடுக்கங்கள் "ஆழமான மைய நிலநடுக்கங்கள்" என அழைக்கப்படுகின்றன.

பிலிப்பின்ஸ் நிலநடுக்கங்களுக்கு அதிகம் பாதிக்கப்படும் நாடுகளில் ஒன்றாகும். குறிப்பாக 1990 ஆம் ஆண்டு ஏற்பட்ட 7.7 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் சுமார் 2,000 பேர் உயிரிழந்தது வரலாற்றில் மிகப்பெரிய பேரழிவுகளில் ஒன்றாக கருதப்படுகிறது. தற்போது ஏற்பட்டுள்ள நிலநடுக்கத்தின் பாதிப்புகள் குறித்த முழுமையான தகவல்களை அதிகாரிகள் தொடர்ந்து சேகரித்து வருகின்றனர்.