உக்ரைன் மீது மீண்டும் ரஷியாவின் பயங்கர தாக்குதல்.. ஹைப்பர்சோனிக் ஓரேஷ்னிக் ஏவுகணை பயன்படுத்தியது!

உக்ரைன் தலைநகர் கீவ் மீது ரஷியா மூன்றாவது முறையாக ஹைப்பர்சோனிக் ஓரேஷ்னிக் பாலிஸ்டிக் ஏவுகணை தாக்குதல் நடத்தியதாக ஸெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.

உக்ரைன் மீது மீண்டும் ரஷியாவின் பயங்கர தாக்குதல்.. ஹைப்பர்சோனிக் ஓரேஷ்னிக் ஏவுகணை பயன்படுத்தியது!

உக்ரைன் மீது ரஷியா மீண்டும் பயங்கர தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த முறை, அதிவேக ஹைப்பர்சோனிக் “ஓரேஷ்னிக்” பாலிஸ்டிக் ஏவுகணையை பயன்படுத்தி ரஷியா தாக்குதல் நடத்தியதாக உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஸெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.

ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்த தாக்குதலில் 2 பேர் உயிரிழந்ததாகவும், 83 பேர் காயமடைந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

2022ஆம் ஆண்டு தொடங்கிய ரஷியா-உக்ரைன் போர் நான்காவது ஆண்டை எட்டியுள்ள நிலையில், ரஷியா இந்த சக்திவாய்ந்த ஓரேஷ்னிக் ஏவுகணையை மூன்றாவது முறையாக பயன்படுத்தியுள்ளது. முன்னதாக 2024 நவம்பரில் டினிப்ரோ நகரம் மீதும், 2026 ஜனவரியில் லிவீவ் நகரம் மீதும் இதே ஏவுகணையால் தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

தற்போது, உக்ரைன் தலைநகர் கீவ் அருகே உள்ள பிலா செர்க்வா நகரம் மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக ஸெலன்ஸ்கி தனது சமூக வலைதள பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த தாக்குதலில் ஓரேஷ்னிக் ஏவுகணையுடன் 600-க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் மற்றும் 90-க்கும் அதிகமான ஏவுகணைகளும் பயன்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தாக்குதலின் காரணமாக அரசு அலுவலகங்கள், குடியிருப்புகள் மற்றும் பள்ளிகள் உள்ளிட்ட பல கட்டிடங்கள் கடுமையாக சேதமடைந்தன.

இந்நிலையில், ரஷியா ஏவிய 549 ட்ரோன்கள் மற்றும் 55 ஏவுகணைகளை தங்கள் விமானப்படை இடைமறித்து அழித்ததாக உக்ரைன் தெரிவித்துள்ளது.

“ஓரேஷ்னிக்” ஏவுகணை உலகின் மிகவும் சக்திவாய்ந்த ஹைப்பர்சோனிக் ஆயுதங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. ஒலியின் வேகத்தைவிட பத்து மடங்கு அதிக வேகத்தில் பயணிக்கும் இந்த ஏவுகணை, நிலத்தடியில் உள்ள பல அடுக்குமாடி கட்டிடங்களையும் அழிக்கும் திறன் கொண்டதாக கூறப்படுகிறது.

மேலும், உலகின் எந்த ஏவுகணை பாதுகாப்பு அமைப்பையும் தகர்க்கும் திறன் இந்த ஏவுகணைக்கு இருப்பதாக ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் முன்பு தெரிவித்திருந்தார்.

இதற்கிடையில், இந்த தாக்குதலை ரஷிய பாதுகாப்பு அமைச்சகமும் உறுதிப்படுத்தியுள்ளது. தங்கள் பிராந்தியத்தின் மீது உக்ரைன் மேற்கொண்ட தாக்குதல்களுக்கு பதிலடியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக ரஷியா விளக்கம் அளித்துள்ளது.