தமிழ்நாட்டிற்கு தடையின்றி உரம் வழங்க வேண்டும்.. பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் கடிதம்!

தமிழ்நாட்டில் உரத்தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க யூரியா, டிஏபி மற்றும் பொட்டாஷ் உரங்களை உடனடியாக வழங்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் சி. ஜோசப் விஜய் கடிதம் எழுதியுள்ளார்.

தமிழ்நாட்டிற்கு தடையின்றி உரம் வழங்க வேண்டும்.. பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் கடிதம்!

தமிழ்நாட்டிற்கு தேவையான உரங்களை தடையின்றி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் கடிதம் எழுதியுள்ளார்.

இதுகுறித்து முதலமைச்சர் விஜய் எழுதியுள்ள கடிதத்தில், தமிழ்நாட்டில் 40 சதவீதத்திற்கும் அதிகமான மக்கள் வேளாண்மையை வாழ்வாதாரமாகக் கொண்டு வாழ்ந்து வருவதாக குறிப்பிட்டுள்ளார். மாநிலத்தில் சுமார் 48.27 லட்சம் எக்டரில் நிகர சாகுபடியும், 62.25 லட்சம் எக்டரில் மொத்த சாகுபடியும் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், தமிழ்நாட்டில் உள்ள மொத்த விவசாயிகளில் 92 சதவீதம் பேர் சிறு மற்றும் குறு விவசாயிகள் என்றும், இந்தியாவின் மொத்த நீர்வளத்தில் 3 சதவீதம் மட்டுமே தமிழ்நாட்டில் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நெல், சிறுதானியங்கள், எண்ணெய்வித்துகள், பருத்தி, கரும்பு, காய்கறிகள், மலர்கள், பழங்கள், மூலிகை மற்றும் நறுமணப் பயிர்கள் உள்ளிட்ட பல்வேறு பயிர்கள் தமிழ்நாட்டில் பரவலாக சாகுபடி செய்யப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

2026ஆம் ஆண்டு மே 10ஆம் தேதி தமிழ்நாடு முதலமைச்சராக பொறுப்பேற்றதிலிருந்து அனைத்து துறைகளின் செயல்பாடுகளையும் ஆய்வு செய்து வருவதாக தெரிவித்துள்ள முதல்வர் விஜய், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் ஆய்வின்போது உர விநியோகத்தில் குறைபாடுகள் இருப்பது தெரியவந்ததாக கூறியுள்ளார்.

அதன்படி, 2026 ஏப்ரல் மற்றும் மே மாதங்களுக்கு தமிழ்நாட்டிற்கு வழங்கப்பட வேண்டிய 39,001 மெட்ரிக் டன் யூரியா, 28,607 மெட்ரிக் டன் டிஏபி மற்றும் 24,235 மெட்ரிக் டன் பொட்டாஷ் உரங்கள் இன்னும் வழங்கப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவதாலும், காரீப் பருவ சாகுபடிக்கு விவசாயிகள் ஆர்வம் காட்டி வருவதாலும், யூரியா மற்றும் டிஏபி உரங்களின் தேவை மேலும் அதிகரிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில் உரத்தட்டுப்பாடு ஏற்பட்டால் மாநிலத்தின் உணவுப் பாதுகாப்பே பாதிக்கப்படும் அபாயம் இருப்பதாகவும் எச்சரித்துள்ளார்.

எனவே, உடனடியாக 3.83 லட்சம் மெட்ரிக் டன் யூரியா, 1.05 லட்சம் மெட்ரிக் டன் டிஏபி மற்றும் 0.83 லட்சம் மெட்ரிக் டன் பொட்டாஷ் உரங்களை தமிழ்நாட்டிற்கு வழங்க தேவையான அறிவுறுத்தல்களை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வழங்க வேண்டும் என பிரதமர் மோடியிடம் முதல்வர் விஜய் வலியுறுத்தியுள்ளார்.