‘ஜன நாயகன்’ வெளியீட்டில் தாமதம்.. தணிக்கைச் சான்றிதழால் சிக்கல்?
முதல்வர் விஜய் நடித்துள்ள ‘ஜன நாயகன்’ திரைப்படத்தின் வெளியீடு தணிக்கைச் சான்றிதழ் பிரச்னையால் தாமதமாகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
முதல்வர் விஜய் நடித்துள்ள ‘ஜன நாயகன்’ திரைப்படத்தின் வெளியீடு குறித்து ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கும் நிலையில், படத்தின் ரிலீஸ் அறிவிப்பில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தவெக தலைவர் விஜய் தமிழகத்தின் முதல்வராக பதவியேற்ற பிறகு, ‘ஜன நாயகன்’ திரைப்படத்தின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்படும் என ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர். இதற்காக படத்தின் தயாரிப்பாளர் வெங்கட் நாராயணா, முதல்வர் விஜய்யை நேரில் சந்தித்து பேசியதாகவும் கூறப்பட்டது.
ஆனால், தற்போது தணிக்கைச் சான்றிதழ் தொடர்பான சிக்கல் காரணமாக படம் இன்னும் திரைக்கு வராமல் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தணிக்கைச் சான்றிதழ் கிடைத்த உடனே அதிகாரப்பூர்வ வெளியீட்டு அறிவிப்பு வெளியாகும் என தயாரிப்பாளர் ஏற்கனவே தெரிவித்திருந்தார்.
இதற்கிடையில், ‘ஜன நாயகன்’ திரைப்படத்தை பார்த்த தணிக்கை வாரியம் இதுவரை சான்றிதழ் வழங்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் படம் மே மாத வெளியீட்டிலிருந்து தள்ளிப்போய் ஜூன் மாதத்தில் திரைக்கு வர வாய்ப்புள்ளதாக சினிமா வட்டாரங்களில் பேசப்படுகிறது.
மேலும், ஜூன் 22ஆம் தேதி முதல்வர் விஜய்யின் பிறந்த நாள் என்பதால், அதற்கு முன்னதாகவே படத்தை வெளியிட தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டிருக்கலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
‘ஜன நாயகன்’ திரைப்படம் குறித்து வெளியாகும் ஒவ்வொரு தகவலும் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், அதிகாரப்பூர்வ ரிலீஸ் அறிவிப்புக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
Prasanth Subramani