ஆதார் அட்டையை இலவசமாக புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.. முக்கிய அறிவிப்பு!

ஆதார் அட்டையில் உள்ள விவரங்களை இலவசமாக புதுப்பிக்கும் வசதி 2027 ஜூன் 14 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. புதிய ‘Aadhaar’ செயலியும் விரைவில் அறிமுகமாக உள்ளது.

ஆதார் அட்டையை இலவசமாக புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.. முக்கிய அறிவிப்பு!

ஆதார் அட்டையில் உள்ள விவரங்களை இலவசமாக புதுப்பிக்கும் வசதிக்கான கால அவகாசம் மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளதாக ஆதார் ஆணையம் அறிவித்துள்ளது. இதன்படி, வரும் 2027 ஜூன் 14 ஆம் தேதி வரை பொதுமக்கள் எந்த கட்டணமும் இன்றி ஆதார் விவரங்களை புதுப்பித்து கொள்ளலாம்.

ஆதார் எண் மற்றும் அட்டைக்கான பதிவு முறைகளில் ஒழுங்குமுறையை உறுதி செய்யவும், மோசடிகளைத் தடுக்கவும் கடந்த 2016ஆம் ஆண்டு ஆதார் ஆணையம் புதிய விதிமுறைகளை அறிமுகப்படுத்தியது.

அதன்படி, ஆதார் அட்டை வைத்திருப்போர் ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கும் ஒருமுறை தங்களின் விவரங்களை புதுப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. பெயர், தந்தை அல்லது கணவர் பெயர், முகவரி, கைப்பேசி எண், பிறந்த தேதி உள்ளிட்ட விவரங்களை சமீபத்திய தகவல்களுடன் புதுப்பிப்பது அவசியமாக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக குழந்தைகள் வளரும்போது கைரேகை, கருவிழி உள்ளிட்ட பயோமெட்ரிக் விவரங்களில் மாற்றம் ஏற்படுவதால், அவற்றையும் புதுப்பிக்க வேண்டியது முக்கியம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெயர், பிறந்த தேதி, பாலினம், முகவரி, கைப்பேசி எண், மின்னஞ்சல் முகவரி மற்றும் பயோமெட்ரிக் விவரங்களை புதுப்பிக்க ஆதார் பதிவு மையங்களை அணுகலாம்.

முகவரி மாற்றம் போன்ற சேவைகளை மட்டும் https://myadhaar.uidai.gov.in என்ற இணையதளம் மூலம் ஆவணங்களை பதிவேற்றம் செய்து ஆன்லைனில் புதுப்பிக்கலாம்.

இந்த நிலையில், இலவச ஆதார் புதுப்பிப்பு சேவைக்கான கால அவகாசம் 2027 ஜூன் 14 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பொதுமக்கள் எந்த கட்டணமும் இன்றி ஆன்லைன் வழியாக தங்களின் ஆதார் விவரங்களை புதுப்பித்து கொள்ள முடியும்.

மேலும், நீண்ட காலமாக பயன்பாட்டில் இருந்து வரும் ‘mAadhaar’ செயலி விரைவில் நிறுத்தப்பட உள்ளதாகவும், அதற்குப் பதிலாக புதிய ‘Aadhaar’ செயலியை பதிவிறக்கம் செய்ய பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய செயலியில் QR Code மூலம் ஆதார் விவரங்களை பாதுகாப்பாக பகிர்ந்து கொள்ளும் வசதியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.