“என் குழந்தைகளுக்கு ஜப்பானியம் மட்டுமே தெரியும்”.. கண்ணீர் மல்க பேசிய இந்திய உணவக உரிமையாளர்!
ஜப்பானில் 30 ஆண்டுகளாக வசித்து வந்த இந்திய உணவக உரிமையாளர் மனிஷ் குமார், புதிய குடியேற்ற விதிகளால் விசா மறுக்கப்பட்டதை தொடர்ந்து கண்ணீர் மல்க பேசிய வீடியோ வைரலாகியுள்ளது.
ஜப்பானில் கடந்த மூன்று தசாப்தங்களாக வசித்து வந்த இந்திய உணவக உரிமையாளர் மனிஷ் குமார், புதிய குடியேற்ற விதிகளால் தனது தொழில் விசா புதுப்பிப்பு மறுக்கப்பட்டதை தொடர்ந்து கண்ணீர் மல்க பேசிய சம்பவம் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
ஜப்பானின் சைதாமா மாகாணத்தில் கடந்த 18 ஆண்டுகளாக இந்திய உணவகத்தை நடத்தி வந்த மனிஷ் குமார், அந்நாட்டின் புதிய குடியேற்ற விதிகளின் கீழ் தனது தொழில் விசா விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
மே 13ஆம் தேதி நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் உரையாற்றிய அவர், “என் குழந்தைகளுக்கு ஜப்பானியம் மட்டுமே தெரியும். அவர்கள் இந்தியாவை அறியவே மாட்டார்கள். இப்போது திடீரென இந்தியாவுக்கு திரும்பச் சொல்லப்படுகிறோம்” என உருக்கமாக பேசியுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
கண்ணீருடன் பேசிய மனிஷ் குமார், “என் குழந்தைகள் இங்கேயே பிறந்து வளர்ந்தவர்கள். அவர்கள் ஜப்பானிய பள்ளிகளில் படிக்கிறார்கள். நண்பர்களும் ஜப்பானியர்கள்தான். நான் கடினமாக உழைத்து வீடும் வாங்கியுள்ளேன். இப்போது திடீரென இந்தியாவுக்கு திரும்பச் சொல்வது மனிதாபிமானமற்றது” என்று வேதனை தெரிவித்துள்ளார்.
மேலும், ஜப்பானிய சமூகத்தினரும் வாடிக்கையாளர்களும் வழங்கிய ஆதரவால் தான் இந்த நிலைக்கு வந்ததாகவும், “நான் எந்த தவறும் செய்யவில்லை. விதிகள் திடீரென மாறிவிட்டதால் எங்களை நாடு திரும்பச் சொல்வது கொடூரமானது” என்றும் கூறியுள்ளார்.
ஜப்பான் அரசு கடந்த ஆண்டு தொழில் மேலாளர் விசா விதிகளில் முக்கிய மாற்றங்களை செய்தது. அதன்படி, குறைந்தபட்ச முதலீட்டு தொகை 5 மில்லியன் யென்னிலிருந்து 30 மில்லியன் யென்னாக உயர்த்தப்பட்டது. அதாவது சுமார் 1.9 லட்சம் அமெரிக்க டாலர் மதிப்பிலான முதலீடு அவசியமாக்கப்பட்டது.
மேலும், விண்ணப்பதாரர்கள் அல்லது முழுநேர ஊழியர்கள் ஜப்பானிய மொழியில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்ற புதிய நிபந்தனையும் அறிமுகப்படுத்தப்பட்டது. பொதுவாக JLPT N2 அளவிலான மொழித் திறன் தேவைப்படுவதாக கூறப்படுகிறது.
இந்த புதிய விதிகளுக்கு பிறகு தொழில் மேலாளர் விசா விண்ணப்பங்கள் 96 சதவீதம் குறைந்துள்ளதாக ஜப்பான் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இதற்கிடையில், புதிய விசா விதிகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என கோரி Change.org தளத்தில் தொடங்கப்பட்ட மனுவில் சுமார் 60,000 பேர் கையெழுத்திட்டுள்ளனர். அந்த மனு ஜப்பான் குடியேற்ற சேவை அமைப்பிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம், ஜப்பானில் நீண்ட காலமாக வசித்து வரும் வெளிநாட்டவர்கள் எதிர்கொள்ளும் குடியேற்ற சிக்கல்கள் மற்றும் அந்நாட்டின் கடுமையான குடியேற்ற கொள்கைகள் குறித்து இணையத்தில் பரவலான விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
Prasanth Subramani