உக்ரைன் போருக்கு மத்தியில் ரஷியா – பெலாரஸ் கூட்டு அணு ஆயுதப் பயிற்சி!

உக்ரைன் போரின் பின்னணியில் ரஷியா மற்றும் பெலாரஸ் இணைந்து தரை, கடல், வான்வழி அணு ஆயுதப் பயிற்சியை மேற்கொண்டுள்ளன. இதற்கிடையில் ரஷிய எண்ணெய் நிலையத்தை உக்ரைன் ட்ரோன் தாக்கியுள்ளது.

உக்ரைன் போருக்கு மத்தியில் ரஷியா – பெலாரஸ் கூட்டு அணு ஆயுதப் பயிற்சி!

உக்ரைன் போர் 4 ஆண்டுகளை கடந்துள்ள நிலையில், ரஷியா தனது அண்டை நாடான பெலாரஸுடன் இணைந்து தரை, கடல் மற்றும் வான்வழி கூட்டு அணு ஆயுதப் பயிற்சியை மேற்கொண்டுள்ளது.

மாஸ்கோ அருகே உக்ரைன் சமீபத்தில் நடத்திய ட்ரோன் தாக்குதலில் மூவர் உயிரிழந்ததை தொடர்ந்து இந்த 3 நாள் அணு ஆயுதப் பயிற்சி கடந்த செவ்வாய்க்கிழமை தொடங்கப்பட்டது.

ஆக்கிரமிப்பு அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் வகையில் அணு ஆயுதப்படைகளை தயார்நிலையில்வைப்பதே இந்தப் பயிற்சியின் முக்கிய நோக்கமாக கூறப்பட்டுள்ளது.

இந்த மிகப்பெரிய ராணுவப் பயிற்சியில் சுமார் 64 ஆயிரம் ராணுவ வீரர்கள், 200-க்கும் மேற்பட்ட ஏவுகணை ஏவுதளங்கள், 140 போர் விமானங்கள், 73 போர்க்கப்பல்கள் மற்றும் 13 நீர்மூழ்கிக் கப்பல்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் கடந்த 2024ஆம் ஆண்டு அணு ஆயுதக் கொள்கையில் முக்கிய மாற்றங்களை கொண்டு வந்திருந்தார். அதன்படி, அணு ஆயுத நாடொன்றின் ஆதரவுடன் ஏதேனும் நாடு ரஷியாவைத் தாக்கினால், அது கூட்டுத் தாக்குதலாக கருதப்படும் என அறிவிக்கப்பட்டது.

இந்த அணு பாதுகாப்பு வலயத்தில் பெலாரஸையும் இணைத்துள்ள ரஷியா, அங்கு தனது அதிநவீன ஏவுகணைகளை நிலைநிறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கிடையில், ரஷியாவின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் ஒன்றை உக்ரைன் ட்ரோன் மூலம் தாக்கியுள்ளது. உக்ரைன் எல்லையிலிருந்து சுமார் 800 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள இந்த எண்ணெய் மையம் தாக்கப்பட்டதில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது.

இந்த தாக்குதலில் இருவர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. தீப்பற்றி எரியும் காட்சிகளை உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஸெலென்ஸ்கி வெளியிட்டுள்ளார்.

மே மாதத்தில் மட்டும் உக்ரைன் தாக்கிய 11ஆவது ரஷிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் இதுவாகும். இந்த தொடர் தாக்குதல்களால் நாளொன்றுக்கு 2.38 லட்சம் டன் உற்பத்தித் திறன் கொண்ட பல எண்ணெய் மையங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், ரஷியாவின் மொத்த எண்ணெய் சுத்திகரிப்பு திறனில் கால் பங்கு தற்போது பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.