72 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழகத்தில் கூட்டணி அரசு.. முதல்வர் விஜய் அமைச்சரவை முழு விவரம்!
முதல்வர் சி. ஜோசப் விஜய் தலைமையில் தமிழகத்தில் 72 ஆண்டுகளுக்குப் பிறகு கூட்டணி அரசு அமைந்துள்ளது. தவெக, காங்கிரஸ், விசிக, ஐயுஎம்எல் கட்சிகளைச் சேர்ந்த 35 அமைச்சர்கள் பதவியேற்றுள்ளனர்.
தமிழ்நாட்டில் 72 ஆண்டுகளுக்குப் பிறகு கூட்டணி அரசு அமைந்துள்ளது. தமிழக வெற்றிக் கழக தலைவர் மற்றும் முதல்வர் சி. ஜோசப் விஜய் தலைமையில் அமைந்துள்ள இந்த புதிய அரசில் தவெக, காங்கிரஸ், விசிக மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் இடம்பெற்றுள்ளன.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெருங்கட்சியாக உருவெடுத்தது. ஆனால், தனிப்பெரும்பான்மை இல்லாத காரணத்தால் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் அரசு அமைக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, கடந்த மே 10ஆம் தேதி முதல்வர் சி. ஜோசப் விஜய் மற்றும் 9 அமைச்சர்கள் பதவியேற்றனர். பின்னர் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டு, வியாழக்கிழமை 23 அமைச்சர்களும், வெள்ளிக்கிழமை மேலும் 2 அமைச்சர்களும் பதவியேற்றனர்.
இதுவரை தவெக சார்பில் 31 அமைச்சர்கள், காங்கிரஸ் சார்பில் 2 அமைச்சர்கள், விசிக சார்பில் 1 அமைச்சர் மற்றும் ஐயுஎம்எல் சார்பில் 1 அமைச்சர் என மொத்தம் 35 பேர் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளனர்.
இதன் மூலம் தமிழக வரலாற்றில் முதல்முறையாக கூட்டணி அரசு அமைந்துள்ளது. மேலும், 59 ஆண்டுகளுக்குப் பிறகு காங்கிரஸ் கட்சியும் தமிழக அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழக அமைச்சர்கள் மற்றும் துறைகள்:
- சி. ஜோசப் விஜய் – பொதுநிர்வாகம், உள்துறை, காவல், சிறப்பு திட்டங்கள்
- என். ஆனந்த் – ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை
- கே.ஏ. செங்கோட்டையன் – வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை
- ஆதவ் அர்ஜுனா – பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாடு
- கே.ஜி. அருண்ராஜ் – மக்கள் நல்வாழ்வு
- பி. வெங்கடரமணன் – உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு
- ஆர். நிர்மல் குமார் – எரிசக்தி வளங்கள் மற்றும் சட்டம்
- ராஜ்மோகன் – பள்ளிக்கல்வி, தமிழ் வளர்ச்சி, தகவல் மற்றும் விளம்பரம்
- டி.கே. பிரபு – இயற்கை வளங்கள்
- எஸ். கீர்த்தனா – தொழில்துறை
- ஸ்ரீநாத் – மீன்வளத்துறை
- எஸ். கமலி – கால்நடை வளர்ச்சித்துறை
- சி. விஜயலட்சுமி – பால்வளத்துறை
- ஆர்.வி. ரஞ்சித் குமார் – வனத்துறை
- வினோத் – வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை
- ராஜீவ் – சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம்
- பி. ராஜ்குமார் – வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி
- வி. காந்திராஜ் – கூட்டுறவுத்துறை
- பி. மதன் ராஜா – சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள்
- கே. ஜெகதீஸ்வரி – சமூக நலன் மற்றும் மகளிர் மேம்பாடு
- எஸ். ராஜேஷ் குமார் – சுற்றுலாத்துறை
- எம். விஜய் பாலாஜி – கைத்தறி மற்றும் துணிநூல்
- டி. லோகேஷ் தமிழ்செல்வன் – வணிகவரி மற்றும் பத்திரப்பதிவு
- ஏ. விஜய் தமிழன் பார்த்திபன் – போக்குவரத்து
- ரமேஷ் – இந்து சமய அறநிலையத்துறை
- பி. விஸ்வநாதன் – உயர்கல்வித்துறை
- ஆர். குமார் – செயற்கை நுண்ணறிவு, தகவல் தொழில்நுட்பம் மற்றும் எண்ம சேவைகள்
- கே. தென்னரசு – அயலக வாழ் தமிழர்கள் நலன்
- வி. சம்பத் குமார் – பிற்படுத்தப்பட்டோர் நலன்
- ஜெ. முகமது ஃபர்வாஸ் – தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாடு
- டி. சரத்குமார் – மனிதவள மேம்பாடு
- என். மரிய வில்சன் – நிதி, திட்ட மற்றும் மேம்பாடு
- கே. விக்னேஷ் – மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை
- வன்னி அரசு – ஆதிதிராவிடர் நலன்
- ஷாஜகான் – சிறுபான்மையினர் நலன்
இந்த அமைச்சரவை அமைப்பில் இளம் தலைமுறை, கல்வியறிவு மற்றும் தொழில்நுட்ப துறைக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டிருப்பது அரசியல் வட்டாரங்களில் கவனம் பெற்றுள்ளது.
Prasanth Subramani