டாலருக்கு எதிராக ரூபாய் மீண்டும் உயர்வு.. 95.73 ஆக வலுவடைந்த இந்திய நாணயம்!
ரிசர்வ் வங்கியின் தலையீடு மற்றும் கச்சா எண்ணெய் விலை சரிவால் டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு தொடர்ந்து இரண்டாவது நாளாக உயர்ந்து 95.73 ஆக நிலைபெற்றது.
இந்திய ரிசர்வ் வங்கியின் தலையீடு மற்றும் கச்சா எண்ணெய் விலை சரிவின் பின்னணியில், டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து இரண்டாவது வர்த்தக அமர்வாக உயர்வுடன் முடிவடைந்தது.
இன்றைய அந்நியச் செலாவணி வர்த்தகத்தில், இந்திய ரூபாய் டாலருக்கு எதிராக ரூ. 95.73 என்ற நிலையில் நிலைபெற்றது. இது முந்தைய நாள் நிறைவு விலையை விட 63 காசுகள் உயர்வாகும்.
ஈரான் தொடர்பான பேச்சுவார்த்தைகள் சாதகமான திசையில் நகர்வதாக அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் மார்கோ ரூபியோ தெரிவித்ததை தொடர்ந்து உலக சந்தைகளில் நிம்மதி நிலவியதாக அந்நியச் செலாவணி வர்த்தகர்கள் கூறியுள்ளனர்.
மேலும், உள்நாட்டு பங்குச் சந்தைகளின் நேர்மறை நிலை மற்றும் அமெரிக்க கருவூலப் பத்திரங்களின் வருவாய் விகிதங்களில் ஏற்பட்ட சரிவும் ரூபாயின் மதிப்பு உயர்வுக்கு ஆதரவாக இருந்ததாக சந்தை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணி சந்தையில், டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு இன்று ரூ. 96.30 என்ற நிலையில் வர்த்தகத்தைத் தொடங்கியது.
பின்னர் வர்த்தகத்தின் போது அதிகபட்சமாக ரூ. 95.30 மற்றும் குறைந்தபட்சமாக ரூ. 95.68 என்ற நிலைகளை தொட்டது.
இறுதியில், ரூபாய் மதிப்பு ரூ. 95.73 என்ற நிலையில் வர்த்தகத்தை நிறைவு செய்தது.
கச்சா எண்ணெய் விலை மென்மையடைந்ததும், இந்திய ரிசர்வ் வங்கி மேற்கொண்ட நடவடிக்கைகளும் ரூபாயின் நிலைத்தன்மைக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகின்றன.
Prasanth Subramani