வங்கி பங்குகள் ஏற்றம்.. உயர்வுடன் முடிந்த இந்திய பங்குச்சந்தை!
முன்னணி வங்கி பங்குகளில் முதலீட்டாளர்கள் தொடர்ந்து வாங்கியதாலும், உலகளாவிய சந்தைகளின் நேர்மறை போக்காலும் இந்திய பங்குச்சந்தைகள் இன்று உயர்வுடன் முடிவடைந்தன.
முன்னணி வங்கி பங்குகளை முதலீட்டாளர்கள் தொடர்ந்து வாங்கியதாலும், உலகளாவிய சந்தைகளின் நேர்மறை நிலை காரணமாகவும் இந்திய பங்குச்சந்தைகள் இன்று (வெள்ளிக்கிழமை) உயர்வுடன் முடிவடைந்தன.
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் ஏற்படலாம் என்ற நம்பிக்கையும் சந்தை உயர்வுக்கு முக்கிய காரணமாக இருந்தது.
30 பங்குகளை கொண்ட மும்பை பங்குச்சந்தை குறியீடான சென்செக்ஸ், காலை வர்த்தகத்தில் 627.61 புள்ளிகள் உயர்ந்து 75,810.97 புள்ளிகளாக இருந்தது. பின்னர் வர்த்தகத்தின் இறுதியில் 231.99 புள்ளிகள் உயர்ந்து 75,415.35 புள்ளிகளில் நிறைவடைந்தது.
தேசிய பங்குச்சந்தை குறியீடான நிஃப்டி 50, 64.60 புள்ளிகள் உயர்ந்து 23,719.30 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது.
சென்செக்ஸ் பட்டியலில் இடம்பெற்றிருந்த ட்ரென்ட், ஆக்சிஸ் வங்கி, ஐசிஐசிஐ வங்கி, ஏசியன் பெயிண்ட்ஸ், ஹிந்துஸ்தான் யூனிலீவர், ஹெச்டிஎஃப்சி வங்கி, கோடக் மஹிந்திரா வங்கி மற்றும் பஜாஜ் ஃபைனான்ஸ் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் உயர்வுடன் வர்த்தகமானது.
மறுபுறம் சன் பார்மா, ஐடிசி, பவர் கிரிட் மற்றும் பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனங்களின் பங்குகள் சரிவை சந்தித்தன.
குறைந்த விலைகளில் பங்குகளை வாங்குவதற்கு முதலீட்டாளர்கள் காட்டிய ஆர்வம் மற்றும் மத்திய கிழக்கு பகுதியில் பதற்றம் குறையக்கூடும் என்ற உலகளாவிய நம்பிக்கை காரணமாக உள்நாட்டு சந்தைகள் மிதமான ஏற்றத்தில் இருந்ததாக வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
செயற்கை நுண்ணறிவு சார்ந்த உலகளாவிய முதலீட்டு போக்கும் சந்தைக்கு ஆதரவாக இருந்தது. அதேநேரத்தில், உள்நாட்டு சந்தையில் நிதித்துறை பங்குகள் அதிகளவில் முன்னிலை வகித்ததாக சந்தை நிபுணர்கள் கூறினர்.
ஆசிய சந்தைகளில் தென் கொரியாவின் கோஸ்பி, ஜப்பானின் நிக்கி 225, ஷாங்காயின் எஸ்எஸ்இ காம்போசிட் மற்றும் ஹாங்காங்கின் ஹாங் செங் குறியீடுகள் அனைத்தும் உயர்வுடன் முடிவடைந்தன.
ஐரோப்பிய சந்தைகளும் உயர்வுடன் வர்த்தகமான நிலையில், அமெரிக்க பங்குச்சந்தைகளும் நேற்று ஏற்றத்துடன் நிறைவடைந்திருந்தன.
பங்குச்சந்தை தரவுகளின்படி, வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் ரூ.1,891.21 கோடி மதிப்பிலான பங்குகளை விற்பனை செய்துள்ளனர்.
இதற்கிடையில், உலகளாவிய கச்சா எண்ணெய் விலை 2.3 சதவீதம் உயர்ந்து பீப்பாய் ஒன்றுக்கு 104.7 அமெரிக்க டாலராக இருந்தது.
Prasanth Subramani