காயம் காரணமாக ராஞ்சிக்கு திரும்பிய தோனி.. சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி!
கட்டை விரல் காயம் காரணமாக எம்.எஸ். தோனி ராஞ்சியில் உள்ள தனது வீட்டிற்கு திரும்பியுள்ளார். குஜராத் அணிக்கு எதிரான முக்கிய போட்டியில் அவர் விளையாட மாட்டார் என சிஎஸ்கே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கட்டை விரல் காயம் காரணமாக எம்.எஸ். தோனி ராஞ்சியில் உள்ள தனது வீட்டிற்கு திரும்பியிருப்பது சிஎஸ்கே ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது கடைசி லீக் போட்டியில் இன்று இரவு 7.30 மணிக்கு அகமதாபாத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இந்தப் போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே சிஎஸ்கே அணிக்கு பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பு உயிர்ப்புடன் இருக்கும்.
மேலும், பஞ்சாப், கேகேஆர் மற்றும் ராஜஸ்தான் அணிகள் தோல்வியடைந்தால் சிஎஸ்கே அணி அடுத்த சுற்றுக்கு முன்னேற வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், இந்த முக்கியமான போட்டியில் முன்னாள் கேப்டன் எம்.எஸ். தோனி விளையாட மாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது. இந்த சீசன் முழுவதும் இதுவரை ஒரு போட்டியிலும் தோனி விளையாடாதது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்துள்ளது.
இதுகுறித்து சிஎஸ்கே அணியின் பேட்டிங் பயிற்சியாளர் மைக்கேல் ஹஸ்ஸி கூறுகையில், “அணியுடன் தற்போது தோனி இல்லை என்பதை உறுதிப்படுத்துகிறேன். அவருக்கு கட்டை விரலில் காயம் ஏற்பட்டுள்ளது. தற்போது குணமடைந்து வருகிறார். ஆனால் இன்றைய போட்டிக்குத் தயாராக இல்லை” என்றார்.
மேலும், “ஒருவேளை சிஎஸ்கே அணி பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றால், தோனி நிச்சயமாக அணியுடன் பேக்-அப் வீரராக இணைவார்” என்றும் அவர் தெரிவித்தார்.
சேப்பாக்கத்தில் ரசிகர்கள் முன்னிலையில் தோல்வியடைந்தது வருத்தமளிப்பதாக கூறிய ஹஸ்ஸி, “நாக்அவுட் சுற்றுக்கு முன்னேறுவது தற்போது கடினமாகியுள்ளது. இருப்பினும் மீதமுள்ள போட்டியில் நேர்மறையான மனநிலையுடன் விளையாட வேண்டும்” என்றும் தெரிவித்தார்.
Prasanth Subramani