தமிழகத்தில் அனைத்து பேருந்துகளிலும் மகளிருக்கு இலவச பயணம்? முதல்வர் விஜய் தலைமையில் முக்கிய ஆலோசனை

தமிழகத்தில் அனைத்து பேருந்துகளிலும் மகளிருக்கு இலவச பயண வசதி வழங்குவது குறித்து முதல்வர் விஜய் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழகத்தில் அனைத்து பேருந்துகளிலும் மகளிருக்கு இலவச பயணம்? முதல்வர் விஜய் தலைமையில் முக்கிய ஆலோசனை

தமிழகத்தில் அனைத்து பேருந்துகளிலும் மகளிருக்கு கட்டணமில்லா பயண வசதி வழங்குவது தொடர்பாக முதல்வர் விஜய் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் முக்கிய விவாதங்கள் நடைபெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த திட்டம் தொடர்பாக பொதுமக்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்து வரும் நிலையில், அரசின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து கவனம் திரும்பியுள்ளது.

சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்த ஆய்வுக் கூட்டத்தில், போக்குவரத்துத் துறையின் தற்போதைய செயல்பாடுகள் மற்றும் எதிர்கால திட்டங்கள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. குறிப்பாக, மாநிலம் முழுவதும் மகளிர் அனைவருக்கும் இலவச பேருந்து பயண வசதியை செயல்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் முதல்வர் விஜய் கலந்துரையாடியதாக கூறப்படுகிறது.

மேலும், போக்குவரத்துத் துறையில் அடுத்த ஒரு ஆண்டு, மூன்று ஆண்டு மற்றும் ஐந்து ஆண்டு காலங்களில் செயல்படுத்தப்படவுள்ள வளர்ச்சித் திட்டங்கள் குறித்தும் இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. பொதுப் போக்குவரத்து சேவைகளை நவீனமயமாக்கும் நோக்கில் பல்வேறு புதிய முயற்சிகளும் பரிசீலிக்கப்பட்டன.

பேருந்துகளின் இயக்கத்தை முழுமையாக கண்காணிக்க தனித்துவமான மென்பொருள் உருவாக்கி, ஜிபிஎஸ் தொழில்நுட்பத்தின் மூலம் பேருந்துகளின் புறப்பாடு மற்றும் வருகை நேரங்களை கண்காணிக்கும் திட்டம் குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேபோல், பயணிகள் பணமில்லா பரிவர்த்தனை முறையில் கட்டணம் செலுத்தும் வசதியை அறிமுகப்படுத்துவது பற்றியும் விவாதிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு போக்குவரத்துத் துறையால் இனி புதிதாக வாங்கப்படும் அனைத்து பேருந்துகளும் குளிர்சாதன வசதி கொண்ட மின்சார பேருந்துகளாக இருக்க வேண்டும் என முதல்வர் விஜய் அறிவுறுத்தியதாகவும் கூறப்படுகிறது. இது சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் பயணிகளின் வசதியை மேம்படுத்தும் நோக்கில் எடுக்கப்பட்ட நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.

மேலும், மாநிலம் முழுவதும் சாலைகளில் பேருந்துகளுக்கென தனி வழித்தடங்களை உருவாக்கும் பஸ் ரேபிட் டிரான்சிட் சிஸ்டம் (BRTS) திட்டத்தை விரைவாக செயல்படுத்தவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தேர்தல் வாக்குறுதியாக அறிவிக்கப்பட்ட மகளிர் இலவச பேருந்து பயணத் திட்டம் குறித்து அரசு ஆலோசனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியான நிலையில், இந்தத் திட்டம் எப்போது நடைமுறைக்கு வரும் என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே அதிகரித்துள்ளது.