FIFA உலகக் கோப்பை 2026: புதிய வரலாறுகளுக்கு தயாராகும் கால்பந்து திருவிழா
48 அணிகள் பங்கேற்கும் FIFA உலகக் கோப்பை 2026 புதிய வடிவில் நடைபெறவுள்ளது. ரொனால்டோ, மெஸ்ஸி உள்ளிட்ட ஜாம்பவான்கள் புதிய சாதனைகளை நோக்கி களமிறங்க உள்ளனர்.
2026ஆம் ஆண்டு FIFA உலகக் கோப்பை கால்பந்து தொடர், உலக கால்பந்து வரலாற்றில் மிகப்பெரிய தொடராக நடைபெற உள்ளது. முதல் முறையாக 48 அணிகள் பங்கேற்கும் இந்த தொடர், புதிய போட்டி வடிவம் மற்றும் பல சாதனை வாய்ப்புகளால் ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
இந்த முறை உலகக் கோப்பையில் பங்கேற்கும் 48 அணிகள் 12 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பிரிவிலும் நான்கு அணிகள் இடம்பெறும். லீக் சுற்றின் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களைப் பெறும் 24 அணிகளும், சிறந்த 8 மூன்றாம் இட அணிகளும் சேர்த்து மொத்தம் 32 அணிகள் நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறும்.
இந்த தொடரின் மிகப்பெரிய சிறப்பம்சமாக, கால்பந்து ஜாம்பவான்களான Cristiano Ronaldo மற்றும் Lionel Messi தலா ஆறாவது உலகக் கோப்பையில் விளையாடி புதிய உலக சாதனை படைக்க உள்ளனர். இதுவரை எந்த வீரரும் ஆறு உலகக் கோப்பை தொடர்களில் விளையாடியதில்லை.
மேலும், உலகக் கோப்பை வரலாற்றில் அதிக கோல்கள் அடித்த வீரரான Miroslav Klose-வின் 16 கோல்கள் என்ற சாதனைக்கும் சவால் எழுந்துள்ளது. தற்போதைய கால்பந்து நட்சத்திரங்களான மெஸ்ஸி மற்றும் Kylian Mbappé ஆகியோருக்கு இந்த சாதனையை முறியடிக்கும் வாய்ப்பு இருப்பதாக கால்பந்து நிபுணர்கள் கருதுகின்றனர்.
இந்த உலகக் கோப்பையில் மேலும் ஒரு வரலாற்று தருணமாக, Cape Verde, Curaçao, Jordan மற்றும் Uzbekistan ஆகிய நாடுகள் முதல் முறையாக உலகக் கோப்பை மேடையில் களமிறங்க உள்ளன. இது அந்த நாடுகளின் கால்பந்து வரலாற்றில் முக்கிய மைல்கல்லாக அமையும்.
மொத்தம் 1,248 வீரர்கள் பங்கேற்கும் இந்த பிரம்மாண்ட தொடரில், முந்தைய உலகக் கோப்பைகளை விட அதிக போட்டிகள் நடைபெறவுள்ளன. இதனால் அதிக கோல்கள், புதிய சாதனைகள் மற்றும் மறக்க முடியாத தருணங்கள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய அணிகளின் வருகை, புதிய போட்டி முறை, உலகின் முன்னணி வீரர்களின் கடைசி உலகக் கோப்பை பயணம் மற்றும் பல சாதனைகள் முறியடிக்கப்படக்கூடிய வாய்ப்பு ஆகியவற்றால் FIFA உலகக் கோப்பை 2026, கால்பந்து ரசிகர்களுக்கு மறக்க முடியாத திருவிழாவாக அமைய உள்ளது.
Prasanth Subramani